Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரவி மோகன் சொகுசு பங்களாவில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியது வங்கி: சினிமா வட்டாரத்தில் சலசலப்பு

சென்னை: தனியார் வங்கி கடனில் நடிகர் ரவி மோகன் வாங்கிய இசிஆர் பங்களா வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை இசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் ரவி மோகன் சொகுசு பங்களா வீட்டை தனியார் வங்கி கடனில் வாங்கியுள்ளார். கடன் தொகையை ரவி மோகன் செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் மூன்று அதிகாரிகள் ரவிமோகன் வீட்டிற்கு வந்து அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர். அதில், வாங்கிய கடனை கட்டாவிட்டால் விரைவில் வீட்டை ஜப்தி செய்ய உள்ளதாக அறிவிப்பு நோட்டீசில் குறிப்பிட்டிருந்தது. முன்னதாக வங்கி சார்பில் ரவி மோகனுக்கு கூரியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில் நேற்று மீண்டும் நோட்டீஸ் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரவி மோகன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘டச் கோல்ட் யுனிவர்சல்’ என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ரவி மோகன் கடந்த 2024 செப்டம்பரில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், முதல் படத்திற்காக அவருக்கு முன்பணமாக 6 கோடி வழங்கப்பட்டதாகவும், ஆனால் ரவி மோகன் அந்த நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல், வேறு நிறுவனத்தின் படங்களில் நடித்து வருவதாகவும் அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. தங்களுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது, ரவி மோகன் தருவதாக உறுதி அளித்ததாகவும், ஆனால் பணத்தை திருப்பித் தராமல் சொந்த தயாரிப்பில் படம் எடுத்து வருவதாகவும் நிறுவனத்தின் இயக்குநர் பாலசந்தர் தெரிவித்தார்.

எனவே அவருக்கு வழங்கிய முன்பணத்தை திரும்ப பெறவும், ரவி மோகனின் இசிஆர் பங்களாவை ஜப்தி செய்து பணத்தை திருப்பித் தரவும் கோரி அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் ரவி மோகனின் இசிஆர் சொகுசு பங்களாவை ஜப்தி செய்து தரும்படி கூறிய நிலையில் அந்த வீடு தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியதும், வாங்கிய கடனை நடிகர் ரவி மோகன் சரியாக கட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில்தான் ரவி மோகன் வீட்டிற்கு வாங்கிய கடனை கட்டும்படி பலமுறை வங்கி மூலம் நோட்டீஸ் அனுப்பியும் எந்த ஒரு முறையான பதிலும் வராத நிலையில் நேற்று வங்கி அதிகாரிகள் வீட்டிற்கு வந்து அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர்.