Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரெட் பிளவர் விமர்சனம்...

2047ல் மூன்றாவது உலகப் போர் முடிந்து இந்தியா வல்லரசாகிறது. சில நாடுகளை கட்டுப்படுத்தி இருக்கும் ‘மால்கம் டைனஸ்டி’ என்ற ராணுவப்படை, இந்தியாவையும் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. அதன் செயல்பாடுகளை முறியடிக்க, இந்திய உளவுத்துறை அதிகாரியான விக்னேஷ் மூலமாக, ‘ரெட் பிளவர்’ என்ற ஆபரேஷனை இந்திய அரசு அரங்கேற்றுகிறது.

பெரிய ஆபத்தில் இருந்து இந்தியாவை விக்னேஷ் காப்பாற்றினாரா என்பது மீதி கதை. ஹீரோவாகவும், வில்லனாகவும் வித்தியாசம் காட்டி நடித்துள்ள விக்னேஷின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல் கல். மனிஷா ஜெஷ்னானி கவர்ச்சியாக வருகிறார். பிறகு விக்னேஷுக்கு லிப்லாக் கொடுத்து, நெருக்கமாகவும் நடித்து அதிர வைக்கிறார்.

இந்திய பிரதமர் ஒய்.ஜி.மகேந்திரன், ராணுவ தளபதி நாசர், உலகையே கட்டுப்படுத்த துடிக்கும் தலைவாசல் விஜய் மற்றும் ஜான் விஜய், அஜய் ரத்னம், டி.எம்.கார்த்திக், சுரேஷ் மேனன், ‘நிழல்கள்’ ரவி, யோக் ஜேபி, லீலா சாம்சன், மோகன் ராம் ஆகியோர், தேவையான அளவுக்கு நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளர் தேவசூர்யாவுக்கு பாராட்டுகள். சந்தோஷ் ராம் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை இரைச்சல். எழுதி இயக்கிய ஆண்ட்ரூ பாண்டியன், ஹாலிவுட் போல் உருவாக்க முயன்று, பாதி கிணற்றை தாண்டியிருக்கிறார்.