Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரசிகர்களை அதிர வைத்த ரெஜினா

தென்னிந்திய ெமாழிகளை தொடர்ந்து இந்தியிலும் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள், விளம்பரங்களில் பிசியாக நடித்து வருகிறார் ரெஜினா கசாண்ட்ரா. 34 வயதான அவர், கடந்த 2012ல் ‘சிவா மனசுலோ ஸ்ருதி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்றார். சென்னையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், குழந்தைகளுக்கான டி.வி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் நிறுவனத்தில், தனது ஒன்பது வயதிலேயே தொகுப்பாளராக பணியாற்றினார். பாலாஜி மோகன் எழுதி இயக்கிய ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற குறும்படத்தில் நடித்தார்.

இது 2012ல் அதே பெயரில் படமாக உருவானது. பிரசன்னா, லைலா நடிப்பில் கடந்த 2005 நவம்பர் 18ம் தேதி திரைக்கு வந்த ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமான ரெஜினா கசாண்ட்ரா, தொடர்ந்து பல்வேறு மொழிகளில் வெற்றி படங்களில் நடித்துவிட்டு, ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் அஜித் குமாருக்கு வில்லியாக நடித்து அசத்தினார். தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘செக்‌ஷன் 108’ போன்ற படங்களிலும், இந்திய திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மதுர் பண்டார்கர் இயக்கத்தில் ‘தி வைவ்ஸ்’ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் உருவான ‘பார்ட்டி’, ‘கள்ளபார்ட்’ ஆகிய படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில், திரைத்துறையில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதை தனது ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடிய ரெஜினா கசாண்ட்ரா, சோஷியல் மீடியாவில் நாள்தோறும் தனது புதிய போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.