Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரெட்ரோ விமர்சனம்...

தூத்துக்குடியையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா, ஜோஜூ ஜார்ஜ். அவரது மனைவி, சுவாசிகா. இருவரும் தங்களது வேலைக்காரனின் மகன் சூர்யாவை தத்தெடுக்கின்றனர். பூஜா ஹேக்டேவை காதலித்து திருமணம் செய்ய விரும்பும் சூர்யா, அடியாள் வேலைக்கு முழுக்கு போடுகிறார். முன்னதாக, கேரளாவில் கொள்ளையடித்த அரசு கருவூல பொருட்களை அவர் ஜோஜூ ஜார்ஜூக்கு தெரியாமல் மறைக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜோஜூ ஜார்ஜ், பூஜா ஹெக்டேவை கொல்ல முயற்சிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படம்.

ஸ்டைலான தோற்றங்களில் வந்து, மாஸான ஆக்‌ஷன் மற்றும் பூஜா ஹெக்டேவுடனான காதல் காட்சிகளில் தனது ரசிகர்களுக்கு ஃபுல்மீல்ஸ் பரிமாறி அசத்தியுள்ளார், சூர்யா. சிரிக்கவே தெரியாமல் வளரும் அவர், கடைசியில் சிரிக்க முயற்சிக்கும் காட்சி சூப்பர். அழகாகவும், இயல்பாகவும் நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, சொந்தக்குரலில் பேசியிருக்கிறார். சில இடங்களில் குரல் பிசிறடிக்கிறது. ‘கனிமா’ பாடலில் சூர்யாவுடன் போடும் குத்தாட்டம் ஒன்ஸ்மோர் ரகம். நாசர், பிரகாஷ்ராஜ், ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், விது, ஜெயராம், சிங்கம்புலி, கருணாகரன், கஜராஜ், தமிழ், பிரேம் குமார், சபீதா ராய் என்று, அவரவருக்கான கேரக்டரில் பளிச்சிடுகின்றனர்.

தூத்துக்குடி, அந்தமான் ஆகிய பகுதிகளில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா கடுமையாக உழைத்துள்ளது. கடந்த 1990களை கண்முன் கொண்டு வந்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் உற்சாக ரகம். பின்னணி இசையில் தூள் பறக்கிறது. லாஜிக் மீறல் பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கவலைப்படவில்லை. சூர்யா, பூஜா ஹெக்டே திருமண காட்சியை 15 நிமிடங்கள் சிங்கிள் ஷாட்டில் படமாக்கியது பாராட்டலாம். எடிட்டிங், கலை இயக்கம் போன்றவையும் கவனிக்க வைத்துள்ளன.