Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனம்: எம்புரான்

கேரள முதல்வர் பி.கே.ராமதாஸின் (சச்சின் கடேகர்) மறைவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி, மாநிலத்தில் போதை பழக்கத்தை அதிகரிக்க அவரது மருமகன் விவேக் ஓபராய் முயற்சிக்கிறார். அவரை கொன்று, பி.கே.ராமதாஸின் மகன் டொவினோ தாமஸிடம் கட்சியையும், ஆட்சியையும் ஒப்படைத்த ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்) காணாமல் போவது ‘லூசிஃபர்’ படத்தின் கதை. 2வது பாகத்தில், சிறப்பான ஆட்சியை கொடுப்பார் என்று நம்பிய டொவினோ தாமஸ், பெரும் ஊழல்கள் செய்து ராஜாங்கம் நடத்துகிறார். ஒன்றிய அரசு நியமித்த விசாரணையில் இருந்து தப்பிக்க, பால்ராஜ் பஜ்ரங் (அபிமன்யு சிங்) தலைமையிலான மதவாத கட்சியுடன் கூட்டணி அமைத்து, தந்தையின் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்குகிறார். இதனால், அவரது சகோதரி மஞ்சு வாரியரே எதிரி ஆகிறார். தந்தையின் கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்ற அவர் கட்சியின் தலைமை பொறுப்பு ஏற்கிறார். அவரை கொல்ல டொவினோ தாமஸ் சதி செய்கிறார்.

இதையடுத்து கேரளத்தில் மோசமான சம்பவங்கள் நிகழ்கின்றன. சர்வதேச அளவில் போதை கும்பல்களால் பிரச்னைகள் ஏற்படுகிறது. அனைத்தையும் சரிப்படுத்த ஒரு தேவதூதன் போல் குரேஷி அப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி களமிறங்குகிறார். இறந்து விட்டதாக கருதப்பட்ட அவர் மீண்டு(ம்) வந்தது எப்படி? டொவினோ தாமஸின் ஆட்டம் முடிவுக்கு வந்ததா? மஞ்சு வாரியர் ஆட்சியை கைப்பற்றினாரா என்பது, யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்.

கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த மதக்கலவரம், அதனால் ஏற்பட்ட வன்முறைக்கு பலியான இஸ்லாமியர்கள், அதை அரங்கேற்றிவிட்டு அரசியலுக்கு வந்து தலைவர்களாக மாறியவர்கள் மற்றும் கார்ப்பரேட் அரசியல், இன்றைய ஒன்றிய அரசின் கொள்கைகளால் மதமும், அரசியலும் இணைந்ததால் ஏற்பட்ட தீயவிளைவுகள் போன்ற அன்றாட மக்களின் பிரச்னைகளை, அரசியல் சூழ்ச்சிகளை சமரசமின்றி துணிச்சலாக சொன்ன விதத்தில் இயக்குனரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாரனை பாராட்டலாம். முழு படத்தையும் தனி நபராக தனது தோளில் சுமந்திருக்கும் மோகன்லால், தனது ரசிகர்களுக்கு சரியான தீனி போட்டிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது ஸ்டைல் பளிச்சிடுகிறது. வசன உச்சரிப்பு, பாடிலாங்குவேஜை சரியான விகிதத்தில் கொடுத்து, தன்னை ‘கம்ப்ளீட் ஆக்டர்’ என்று சொல்வதற்கு நியாயம் செய்துள்ளார். ஆனால், சில காட்சிகளில் அவரது ஹீரோயிசத்தை முன்னிறுத்துவது நெருடுகிறது. ஸ்லோமோஷன் காட்சிகளை அவரோ அல்லது இயக்குனரோ தவிர்த்திருக்கலாம்.

மாநில முதல்வருக்கான ‘கெத்து’ காட்டி அசத்தியுள்ளார், டொவினோ தாமஸ். சகோதரிக்கே எதிரியாக மாறுவதை அற்புதமாக வெளிப்படுத்துகிறார். கட்சி தலைமை ஏற்று, சகோதரனுக்கே எதிரியாக மாறி, உயிருக்கு அஞ்சாமல் ஆட்சிக்கு வரும் கேரக்டரில் மஞ்சு வாரியர் சிறப்பாக நடித்துள்ளார். அபிமன்யு சிங்கின் வில்லத்தனம், இன்றைய ஒன்றிய அரசியல் நடப்பை சுட்டிக்காட்டி பயமுறுத்துகிறது. பிருத்விராஜ் சுகுமாரனின் பழிவாங்கும் வெறி, உணர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. சுகந்த் கோயல், இந்திரஜித் சுகுமாரன், இயக்குனர் பாசில், சுராஜ் வெஞ்சரமூடு, ‘ஆடுகளம்’ கிஷோர், பைஜு சந்தோஷ் ஆகியோர், தங்களின் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர்.

கேரளா, வட இந்தியா, பாகிஸ்தான், லண்டன், எகிப்து, ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளின் நிலஅமைப்புகளுக்கு ஏற்ப காட்சிகளை துல்லியமாக ஒளிப்பதிவு செய்துள்ள சுஜித் வாசுதேவ், அரசியல் பொதுக்கூட்டத்தை மாறுபட்ட கோணத்தில் பதிவு செய்து பிரமிக்க வைத்துள்ளார். எடிட்டர் அகிலேஷ் மோகன், ஸ்டண்ட் சில்வா ஆகியோரின் பணிகள் பாராட்டத்தக்கது. பின்னணி இசையில் தீபக் தேவ் மிரட்டி இருக்கிறார். மதவாத அரசியலால் நாட்டில் ஏற்பட்டுள்ள, இனி ஏற்பட இருக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டி, எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது படம். இதன் 3ம் பாகத்துக்கு லீட் கொடுத்துள்ளனர்.