ரவுடியான அனிஷ் மாசிலாமணி, தனது தம்பி தன்னைப்போல் ரவுடியாகிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் கேபிஒய் தீனா, தனது தாயின் கொடூரமான மரணத்துக்கு காரணமானவர்களை போட்டுத்தள்ள காத்திருக்கிறார். தனது அண்ணனுக்கு தெரியாமல், ராம்ஸ் கோஷ்டியுடன் மைம் கோபியின் எதிராளியை போட்டுத்தள்ள சென்ற அனிஷ் மாசிலாமணியின் தம்பி, கேபிஒய் தீனாவால் சுட்டு கொல்லப்படுகிறார். இதையறிந்த அனிஷ் மாசிலாமணி என்ன செய்கிறார் என்பது மீதி கதை.
வழக்கமான ரவுடியாக வந்து, கொடூரமான குணம் படைத்தவராக மைம் கோபி கச்சிதமாக நடித்துள்ளார். தம்பிக்காகவும், குடும்பத்துக்காகவும் உருகும் அனிஷ் மாசிலாமணி, கேரக்டரை உள்வாங்கி இயல்பாக நடித்துள்ளார். கேபிஒய் தீனா, சித்து குமரேசன், ராம்ஸ் என்கிற ராமச்சந்திர துரைராஜ் என அனைவரும் கச்சித நடிப்பு.
குளச்சல் கடற்கரையை கண்முன் கொண்டு வந்துள்ளார், ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ். டுமேவின் பின்னணி இசை இதம். நேர்க்கோட்டில் கதை பயணிக்காமல், பிளாஷ்பேக் மற்றும் அதற்குள் இன்னொரு பிளாஷ்பேக் என்று குழப்பம் ஏற்படுவதை கவனித்திருக்கலாம். வழக்கமான போலீஸ், ரவுடி, அரசியல்வாதி ஆட்டத்தை ஆடியிருக்கும் இயக்குனர் ஹரி வெங்கடேஷ், ‘துப்பாக்கி எடுத்தவனுக்கு துப்பாக்கியே எமன்’ என்று நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார்.
