Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனம் கெவி

கொடைக்கானல் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளகேவி கிராமத்தில் வசிக்கும் மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு 20 கி.மீ பயணித்து கீழே வரவேண்டும். இந்நிலையில், தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க அங்கு வரும் எம்எல்ஏவுக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர். ஆதவனின் மனைவி ஷீலா பிரசவ வலியில் துடிக்கிறார். அவரை ஊர் மக்கள் தொட்டில் கட்டி சுமந்து செல்லும்போது, பனிக்குடம் உடைந்து உயிருக்கு போராடுகிறார். மனைவி பிரசவ வலியில் துடிக்க, அவரது கணவர் போலீசாரின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகிறார். பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை.

மலையில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை அழுத்தமாகவும், வலியுடனும் சொல்லியிருக்கிறார், இயக்குனர் தமிழ் தயாளன். முரட்டு இளைஞனாகவே மாறியிருக்கிறார், ஆதவன். போலீசாரிடம் அடி, உதை வாங்கும்ேபாது உருக வைக்கிறார். மலைவாழ் பெண்ணாகவே வாழ்ந்துள்ளார், ஷீலா. போலீஸ் அதிகாரி சார்லஸ் வினோத், பழிவாங்கும் குணத்தை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். காயத்ரி, ஜாக்குலின் லிடியா, ஜீவா சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். கிராமத்து மக்கள் இயல்பாக நடித்திருக்கின்றனர்.

பசுமையான கிராமத்தையும், மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும் கண்முன் நிறுத்தியுள்ளார், ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா. இரவு நேர காட்சிகளில் கடுமையாக உழைத்துள்ளார். விறுவிறுப்புக்கு எடிட்டர் ஹரி குமரன் உதவியுள்ளார். பாலசுப்ரமணியன்.ஜி, ரவிவர்மா ஆகியோரின் பின்னணி இசை படத்தை தாங்கி நிற்கிறது. ராசி.தங்கதுரை, கிருபாகரன் ஏசய்யா ஆகியோரின் வசனங்கள் இயல்பாக இருக்கின்றன. ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் பிலிம் கம்பெனி தயாரிப்பில் தமிழ் தயாளன் கதை எழுதி இயக்கியுள்ளார். தரமான சில படங்களின் பட்டியலில் ‘கெவி’க்கும் இடம் தரலாம்.