Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனம் பாம்

காளகம்மாய்பட்டி என்ற கிராமம் குலதெய்வம் மற்றும் சாதி பிரச்னை காரணமாக காளபட்டி, கம்மாய்பட்டி என்று இரண்டாக பிரிகிறது. பிரிந்த மக்களை ஒன்றிணைக்க அர்ஜூன் தாஸ், காளி வெங்கட் போராடுகின்றனர். அப்போது காளி வெங்கட் மரணம் அடைகிறார். அர்ஜூன் தாஸ் செய்வதறியாமல் தவிக்கிறார். காளி வெங்கட் உடலில் சாமி இறங்கியிருப்பதாக ஊர் பூசாரி சொல்ல, யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இரு கிராமத்து மக்களும், அவரை தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அதன் பிறகு நடப்பது மீதி கதை.

உடலில் வேதியியல் மாற்றம் காரணமாக பிரியும் வாயுவை மையப்படுத்தி, முழுநீள காமெடி படத்தை இயக்கி இருக்கிறார் விஷால் வெங்கட். தன்னால் நல்லவனாகவும் நடிக்க முடியும் என்று அர்ஜூன் தாஸ் மிரட்டியுள்ளார். ஊரை ஒன்றிணைக்க போராடும் அவரது கேரக்டர், சினிமாவில் புதிய பாதையை திறந்துவிட்டு இருக்கிறது. போதை ஆசாமி காளி வெங்கட், இறந்த பிறகும் வாழ்ந்திருப்பது சிறப்பு. அவரது தங்கை ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பு சிறப்பு. அரசியல்வாதி நாசர், கலெக்டர் அபிராமி, சாதிவெறியர் சிங்கம்புலி, பாலசரவணன் மற்றும் பூவையார் ஆகியோரும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு, கச்சிதம். இமான் இசை ரசிக்கலாம். ஆர்ட் டைரக்டர் மனோஜ் குமார் பணி நேர்த்தி. சாதி பிரிவினை கூடாது, எல்லா சாமியும் ஒன்றுதான் என்று சொன்ன விஷால் வெங்கட், வாயு பிரிதலுக்கு பதிலாக வேறொரு யுக்தியை கையாண்டிருந்தால், இன்னும் சுவாரஸ்யமாக ரசித்திருக்க முடியும்.