Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூம் பாய் பர்ஸ்ட் லுக்: விஜய் சேதுபதி வெளியிட்டார்

சென்னை: திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் இயக்கியிருக்கும் படம், ‘ரூம் பாய்’. சி.நிகில் கதாநாயகனாக அறிமுகமாகும் இதில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் என பலர் நடித்துள்ளனர். சி.பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ளார்.

படம் பற்றி ஜெகன் ராயன் கூறும்போது, “இது குடும்ப சென்டிமென்ட்டுடன் கூடிய குற்றப்புலனாய்வு த்ரில்லர் படம். ஏலகிரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் பாயாக பணிபுரிகிறார் நாயகன். ஒரு நாள் ஓட்டல் மானேஜர் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அதே நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார்.

மானேஜர் இறந்ததற்கும் கண்காணிப்பாளர் காணாமல் போனதற்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்று கதை செல்லும். இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார். இந்தப் படத்தின் முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.