Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திரிஷாவை பின்னுக்கு தள்ளிய ருக்மணி

தற்போது திரையுலகில் ராஷ்மிகா மந்தனா, லீலா, பாக்ய போர்ஸ், மீனாட்சி சவுத்ரி, கயாடு லோஹர், மமிதா பைஜூ, அனஸ்வரா ராஜன் உள்பட பல நடிகைகள் இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வரிசையில், பெங்களூரை சேர்ந்த ருக்மணி வசந்த் தனது இளமை மற்றும் துடிப்பான நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அவரது தந்தை வசந்த் வேணுகோபால் ராணுவ வீரர் என்பதால், ராணுவ பள்ளியில் படித்தார். பிறகு மேற்படிப்பை லண்டனில் முடித்தார். கடந்த 2019ல் கன்னடத்தில் வெளியான ‘பீர்பால் ட்ரைலாஜி’ என்ற படத்தில் அறிமுகமானார். பிறகு இந்தியில் ‘அப்ஸ்டார்ட்ஸ்’ என்ற படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி ஜோடியாக ‘சப்த சாகரதாச்சே எல்லோ-சைடு ஏ’ மற்றும் ‘சப்த சாகரதாச்சே எல்லோ-சைடு பி’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் கன்னடத்தையும் தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கு அதிகமான பாராட்டுகளை பெற்றுத்தந்தது. முதல் பாகம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் பாகம் திரையரங்கில் வெளியாகி வெற்றிபெற்றது.

சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அவர் நடித்த ‘மதராஸி’ என்ற படத்தின் மூலம் தமிழிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கனகவதி என்ற அரசி வேடத்தில் நடித்துள்ள ருக்மணி வசந்தின் தோற்றம், ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் திரிஷாவின் குந்தவை என்ற கதாபாத்திரத்தின் தோற்றத்தையே மிஞ்சும் அளவுக்கு இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த 23ம் தேதி நடந்த இப்படத்தின் விழாவில், படத்தில் நடித்திருந்த அதே கெட்டப்பில் ரசிகர்கள் முன்னால் தோன்றிய ருக்மணி வசந்த், அப்போது கிடைத்த வரவேற்பை பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.