Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ருக்மணியை நெகிழ வைத்த பிரகதி

பல்வேறு மொழிகளில் திரைக்கு வந்த ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் தரமான விமர்சனங்களை பெற்று வருகிறது. திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பு ரசிகர்கள் படக்குழுவினரை மனதார பாராட்டி வருகின்றனர். வசூலில் 335 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ள இப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடித்திருந்தார்.

கடந்த 2022ல் அவர் எழுதி இயக்கி நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலித்த ‘காந்தாரா’ படத்தின் பிரீக்வலாக, ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் உருவாகி இருந்தது. ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம், சம்பத் ராம், பிரமோத் ஷெட்டி உள்பட பலர் நடித்திருந்தனர். பி.அஜ்னீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை பரபரப்பாக பேசப்படுகிறது. இப்படத்தில் மிகவும் அழகாக தோற்றமளித்த ருக்மணி வசந்தின் ‘கனகவதி’ கதாபாத்திரத்துக்கு ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஷெட்டி மேக்கப் மற்றும் ஆடை வடிவமைப்பு பொறுப்பு ஏற்றிருந்தார்.

கனகவதி கெட்டப்பிலேயே இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ருக்மணி வசந்த் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் ருக்மணி வசந்த் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘பிரகதி ஷெட்டிக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். புரமோஷன் முழுவதும் எனது ஒவ்வொரு லுக்கையும் அழகாக வடிவமைத்து, அதிலும் கனகவதியின் லுக்கை கண்முன் சிறப்பாக கொண்டு வந்து கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி. ‘காந்தாரா’ பயணத்தில் எனக்கு நம்பிக்கையான தோழியாக இருந்ததற்கு மிகவும் நன்றி’ என்று நெகிழ்ந்துள்ளார்.