மற்ற துறையில் இருப்பவர்களை விட, திரைப்பட நட்சத்திரங்களை பற்றி அதிகமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதை பலர் கண்டுகொள்வதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே பதிலளிப்பார்கள். ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படத்தின் மிகப்பெரிய வெற்றி மற்றும் வசூல் சாதனையை தொடர்ந்து, கல்யாணி பிரியதர்ஷனை பற்றி ஏராளமான வதந்திகள் வெளியாகின்றன. அதில் ஒரு செய்தியை அவர் கூறியதாக சொல்லப்பட்டது. இதை கவனத்தில் கொண்ட கல்யாணி பிரியதர்ஷன், அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர வைக்க, தனது தந்தை இயக்குனர் பிரியதர்ஷன், தாயார் நடிகை லிசி ஆகியோர், தன்னையும் மற்றும் தனது சகோதரரையும் ஒரு வாரம் வியட்நாமில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டுவிட்டு சென்றதாக கல்யாணி பிரியதர்ஷன் சொன்னதாக செய்தி வெளியானது.
இதையறிந்து ஆவேசம் அடைந்த கல்யாணி பிரியதர்ஷன், அதை கடுமையாக கண்டித்தார். இதுபோன்ற ஒரு விஷயத்தை எப்போதும் தான் சொன்னதில்லை என்றும், அது நடக்கவும் இல்லை என்றும் விளக்கம் அளித்த அவர், தயவுசெய்து இதுபோன்ற கருத்துகளை இனிமேல் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழில் ‘ஹீரோ’, ‘மாநாடு’ போன்ற படங்களில் நடித்திருந்த கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் நடித்து வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படம், இதுவரை 270 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, மலையாளத்தில் அதிக வசூல் செய்த படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.