அரசியல் புரோக்கரான விஜய் ஆண்டனி, எளியவர்களுக்கு பணம் வாங்காமல் பல்வேறு உதவிகள் செய்கிறார். அரசியல் சாணக்கியர் ‘காதல் ஓவியம்’ கண்ணன் என்கிற சுனில் கிருபளானி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட அவரை அப்பதவிக்கு வரக்கூடாது என்பதில் முட்டுக்கட்டை போடும் விஜய் ஆண்டனி, ஒட்டுமொத்த அரசியல் அதிகார மற்றும் ஊழல் வர்க்கத்துக்கு முடிவு கட்ட தீர்மானிக்கிறார். அவரது பின்புலம் என்ன என்பது மீதி கதை.
மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து, அரசியல் சிஸ்டத்தை ஆட்டம் காண வைக்கும் கிட்டு என்ற கேரக்டரில், முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அவருடன் பயணிக்கும் அட்வைசர் செல் முருகன் கவனத்தை ஈர்க்கிறார். விஜய் ஆண்டனி மனைவி திரிப்தி ரவீந்திரா, தனது கண்களாலேயே உணர்வுகளை கடத்திவிடுகிறார். அரசியல் குள்ளநரித்தனத்தை ‘காதல் ஓவியம்’ கண்ணன் அலட்டாமல் வெளிப்படுத்தியுள்ளார். வாகை சந்திரசேகர், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத் உள்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
பொலிட்டிகல் சட்டையர் படத்துக்கான ஒளிப்பதிவை ஷெல்லி ஆர்.காலிஸ்ட் கச்சிதமாக வழங்கியுள்ளார். காட்சிகளை விறுவிறுப்பாக்க ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, தின்ஸாவின் எடிட்டிங் உதவியுள்ளது. விஜய் ஆண்டனி இசையில் கதைக்கேற்ற பாடல்களும், பின்னணி இசையும் ஈர்க்கிறது. அரசியல் அதிகார மற்றும் ஊழல் வர்க்கத்தை வேரோடு களைய வேண்டும் என்பதை சொல்ல முயன்ற இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், அதை லாஜிக் மீறாமல் சொல்லியிருக்க வேண்டும். இறுதியில் ஹீரோயிசமே மிஞ்சுகிறது.