Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உமிழ்நீரால் முகப்பரு குணமாகும் என்ற தமன்னா கருத்துக்கு டெல்லி டாக்டர் பதிலடி

மும்பை: தென்னிந்திய படவுலகை தொடர்ந்து பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள், விளம்பரங்களில் நடிக்க கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில், தனக்கு வரும் முகப்பருக்கள் குறித்து அவர் கூறுகையில், ‘என் முகத்தில் திடீரென்று முகப்பருக்கள் வரும்போது, வேறெந்த சிகிச்சையையும் நான் மேற்கொள்வதில்லை. அவ்வப்போது பருக்கள் மீது என் எச்சிலை தொட்டு வைப்பேன்.

இது எனக்கு பயனுள்ளதாக மாறி முகப்பருக்கள் குணமாகிவிடும்’ என்று சொல்லியிருந்தார். தமன்னா கருத்து இணையதளங்களில் வைரலான நிலையில், சிலர் அவருக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டனர். இந்நிலையில், டெல்லி தனியார் மருத்துவமனையின் தோல் மருத்துவ நிபுணர் ரஷ்மி ஷர்மா என்பவர், தமன்னா கருத்தை முற்றிலும் மறுத்து பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘இது மருத்துவ ரீதியாக சாத்தியமற்றது. பிரபலங்கள் இதுபோன்ற பரிசோதிக்கப்படாத சிகிச்சை முறைகளை பற்றி பொதுவெளியில் பேசும்போது, மக்கள் அதன் அறிவியலை புரிந்துகொள்ளாமல் பின்பற்றுகிறார்கள். எந்தவொரு தோல் மருத்துவரும் இத்தகைய சிகிச்சையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்’ என்றார். இதற்கு இதுவரை தமன்னா பதிலளிக்கவில்லை.