பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரசாரத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக, ஐ.நா மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார் சமந்தா. இந்த பிரசாரம் கடந்த 25ம் தேதி தொடங்கியது. வரும் டிசம்பர் 10ம் தேதி வரை நடக்கிறது. ‘பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில் நடக்கும் இந்த பிரசாரம், ஆன்லைன் வன்முறை, துஷ்பிரயோகம், தொழில்நுட்பங்களின் மூலம் ஏற்படும் மிரட்டல்கள் போன்றவற்றுக்கு எதிராக செயல்படுகிறது.
இந்த முயற்சியில் இணைந்தது குறித்து பேசிய சமந்தா, ‘ஐ.நா மகளிர் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முன்பு நேரில் நடந்தது. இப்போது டிஜிட்டல் திரைகளை பின்தொடர்ந்து, பெண்களின் குரலை மவுனமாக்குகிறது, கண்ணியத்தை குலைக்கிறது. இதுபோன்ற சூழலை நானும் பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம், பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்’ என்றார்.
