தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து தங்களுக்கான இடத்தை உருவாக்கி வருபவர்கள் நடிகை சமந்தா மற்றும் தமன்னா. இருவரும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். தமன்னா, தற்போது ‘ஓ ரோமியோ’, ‘ரேஞ்சர்’, ‘விவான்’ உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமந்தா தற்போது ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற அழகு சாதனப் பொருள் வெளியீட்டு விழாவில் இருவரும் ஒன்றாக பங்கேற்றது ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்தது. தமன்னா, சமந்தா இருவரும் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்ததுடன், ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டனர். மேலும் நிகழ்ச்சி முடிவில் விழாவில் கலந்துகொண்ட புகைப்படக் கலைஞர்களுக்கு சமந்தா, வாசனை திரவிய பாட்டில்களை பரிசாக வழங்கினார். இவ்விழாவில் சமந்தா கருப்பு நிற பாலஸ்ஸோ பேண்ட் மற்றும் அதே நிறத்திலான மேலாடை அணிந்திருந்தார். அதேபோல் நடிகை தமன்னா ஃபிட்டட் டிரெஸ் அணிந்து போஸ் கொடுத்தார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
