Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சரிகாவின் பச்சை நிறம்... எனது பழுப்பு நிற கண்கள்... அக்‌ஷரா குறித்து நெகிழ்ந்த கமல்ஹாசன்

சென்னை: கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகிய மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இதில் அக்‌ஷரா ஹாசன் தமிழில் அஜித் குமாருடன் ‘விவேகம்’, விக்ரமுடன் ‘கடாரம் கொண்டான்’, ஓடிடியில் வெளியான ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ ஆகிய படங்களில் நடித்தார். இந்தியில் அமிதாப் பச்சன், தனுஷுடன் ‘ஷமிதாப்’, ‘லாலி கி ஷாதி மே லாடூ தீவானா’ ஆகிய படங்களில் நடித்தார். இந்தி படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அக்‌ஷரா ஹாசனின் 34வது பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘டியர் அக்‌ஷரா, நீ பிறந்தபோது நான் முதன்முதலில் உன் கண்களை பார்க்கவில்லை. நீ உறங்கிக் கொண்டிருந்தாய். உன் தாயின் பச்சை நிற கண்களை நான் பார்த்து, இவ்வளவு அற்புதமான பரிசாக உன்னை கொடுத்ததற்கு நன்றி சொன்னேன். அப்போது உன் அம்மா, உனக்கு அவரது கண்கள் இருப்பதாக என்னிடம் சொன்னார். பிறகு நான் உற்று பார்த்தபோது, எனது பழுப்பு நிறமும் சிறிதளவு அதில் கலந்திருப்பதை கண்டேன்.

இவை, பெற்றோர்கள் குழந்தைத்தனமாக உரிமை கொண்டாடும் சிறிய ஒற்றுமைகள். உருவத்திலும் சரி, சிந்தனையிலும் சரி, நீ ஒரு அழகான பெண்ணாக வளர்ந்துவிட்டாய். அதே நேரம், உனக்குள் இருக்கும் குழந்தையையும் நீ பாதுகாத்து வைத்திருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த குழந்தையும் என்னுடையதுதான். அந்த குழந்தையை பத்திரமாக காப்பாற்றிக்கொள். பிறந்தநாள் வாழ்த்துகள், அக்‌ஷரா’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.