Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இரண்டாவது திருமணமா?: மேக்னா ராஜ் ஆவேசம்

பெங்களூரு: தமிழில் ‘தப்புத்தாளங்கள்’, ‘கிராமத்து அத்தியாயம்’ உள்பட சில படங்களில் நடித்தவர், கன்னட நடிகர் சுந்தர்ராஜ். ‘வைதேகி காத்திருந்தாள்’ உள்பட சில படங்களில் நடித்தவர், பிரமீளா ஜோஷி. இந்த தம்பதியரின் ஒரே மகள், மேக்னா ராஜ். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருகிறார். பல படங்களில் சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். தன்னுடன் நடித்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்த அவர், 2018 மே 2ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். எனினும், தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்து வந்தார். இந்நிலையில், 2020 ஜூன் 7ம் தேதி சிரஞ்சீவி சர்ஜாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, தனது 39வது வயதில் மரணம் அடைந்தார். அப்போது தனது முதல் குழந்தையை மேக்னா ராஜ் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். கணவர் இறந்த சில மாதங்களில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிறகு மேக்னா ராஜூக்கு ஆண் குழந்தை பிறந்தது. ராயன் ராஜ் சர்ஜா என்று பெயரிட்டார்.

இந்நிலையில், மேக்னா ராஜ் 2வது திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக தகவல் வெளியானது. இதையறிந்து ஆவேசம் அடைந்த அவர், சிரஞ்சீவி சர்ஜாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‘எனக்கு நீயே வேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சரி, நீதான் என் கணவர்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘சிலர், 2வது திருமணம் செய்துகொள் என்றனர். வேறு சிலர், மகனுக்காக வாழ வேண்டும் என்றனர். இதில், யார் சொல்வதை கேட்பது? என் மகனின் எதிர்காலம் குறித்து தீவிரமாக யோசித்து வருகிறேன். ‘இந்த நல்ல தருணத்தை விட்டுவிடாமல் வாழ்ந்துவிட வேண்டும்’ என்று என் கணவர் அடிக்கடி சொல்வார். அதுபோல் நான் வாழ்ந்து வருகிறேன்’ என்றார்.