சென்னை: தென்னிந்திய மொழிப் படங்களை தொடர்ந்து இந்தியிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், வெப்தொடர் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கிறார். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் அவர், கடந்த ஆண்டு தனது 15 வருட காதலரும், தொழிலதிபருமான ஆண்டனி தட்டிலை இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து எப்படி 15 வருடங்கள் தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார் என்று திரையுலகினர் ஆச்சரியப்பட்டனர்.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது: நடிகர் ஜெகபதி பாபுவின் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். எனது தாய் நடிகை மேனகாவும், தந்தை தயாரிப்பாளர் சுரேஷ் குமாரும் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால், எனது காதலுக்கு தடையாக இருக்க மாட்டார்கள் என்று நம்பினேன். இதையறிந்த ஜெகபதி பாபு, ‘உங்கள் வீட்டில் எல்லோரும் வருடக்கணக்கில் காதலிப்பீர்களா?’ என்று ஜாலியாக கிண்டல் செய்தார். நான் அமெரிக்கா செல்ல விரும்பாததால், அதற்கான தேர்வில் வேண்டுமென்றே தோல்வி அடைந்தேன். பள்ளியிலிருந்தே நானும், ஆண்டனி தட்டிலும் காதலித்தோம். பிறகு நாங்கள் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்பதால், எதிர்கால வாழ்க்கை குறித்து ஒரு தெளிவின்றி இருந்தோம்.
ஐந்து ஆண்டுகள் நீண்ட தூர நட்பில் இருந்தோம். பிறகு நான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். அவர் தொழில் தொடங்க விரும்பினார். எங்கள் மதங்கள் வெவ்வேறு என்பதால், வீட்டில் எப்படி ஏற்பார்கள் என்று பயந்தேன். இதனால்வீட்டில் சொல்ல தாமதமானது. ஆனால், அதற்கு முன்பே ஜெகபதி பாபுவிடம்தான் முதலில் சொன்னேன். 4 வருடங்களுக்கு முன்பு என் தந்தையிடம் சொன்னேன். உடனே அவர் சம்மதித்தார். ஜெகபதி பாபுவுடன் நான் ‘அண்ணாத்த’, ‘மிஸ் இந்தியா’ ஆகிய படங்களில் நடித்திருந்தேன்.
