சென்னை: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட, அவற்ைற எல்லாம் கடந்து வெற்றிபெற்று வரும் சமந்தா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயமும் அனைவருக்கும் தெரியும். எல்லாமே வெளிப்படையாக நடந்தது. விவாகரத்து மற்றும் உடல்நலம் அடிப்படையில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று தெரியும். அந்த நேரத்தில் எனக்கு எதிராக சில லட்சம் ட்ரோல்கள் வந்தன.
அதில் அவர்கள் விரும்பியபடி தீர்ப்பு வழங்கினர். எனினும், என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதற்கான பதில் எனக்கு தெரியவில்லை. நான் முழுமையானவள் அல்ல. சில தவறுகள் செய்யலாம், தடுமாறலாம். ஆனால், சிறப்பாக இருக்க முயற்சி செய்து வருகிறேன். ‘புஷ்பா 1: தி ரைஸ்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் காட்சியில் நான் கவர்ச்சியாக நடனமாடியது பற்றி கேட்கின்றனர். அந்த பாடலை மிகப்பெரிய சவாலாக நினைத்து ஆடினேன்.
என்னால் அப்படி நடிக்க முடியுமா என்று பரிசோதித்து பார்க்க விரும்பியதால், அது எனக்கு நானே விடுத்த ஒரு சவால் என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதுமே என்னை கவர்ச்சியான ஒருவராகவே நினைத்தது கிடையாது. யாரும் எனக்கு ஃபோல்டான கேரக்டர்களை கொடுக்க மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். அதனால்தான் அந்த பாடல் காட்சியை ஒரே ஒருமுறை அனுபவமாக எடுத்துக்கொண்டு நடித்தேன். எனக்கு நிறைய லட்சியங்கள் இருக்கின்றன. அந்த லட்சியம் என்பது ஒரு நோக்கத்துடன் இணைந்திருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் இல்லாமல் ஓடிவிடக்கூடாது.