Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உலகின் பணக்கார நடிகர் ஆனார் ஷாருக்கான்

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான், 12 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பின் மூலம் உலகத்தின் பணக்கார நடிகராகியுள்ளார். எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி, பணக்கார (பில்லியனர்) நடிகர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பின் மூலம், நடிகர் ஷாருக்கான் பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (1.2 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகியோரை பணக்காரர் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இதன் மூலம் உலகின் நம்பர் ஒன் பணக்கார நடிகர் என்ற பெருமையை ஷாருக் பெற்றுள்ளார்.

இந்நிலையில், 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு அவர் துவங்கிய “ரெட் சில்லிஸ் என்டர்டெயிமென்ட்” எனும் நிறுவனம் சென்னை எக்ஸ்பிரஸ், ரயீஸ், பதான் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. நடிகர் ஷாருக்கான் ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஆவார். இந்த அணியானது ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் லீக் வருவாய்களின் மூலம் அதிக வருமானம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், மும்பை, அலிபாக் போன்ற நகரங்களிலும் இங்கிலாந்து, துபாய் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடிகர் ஷாருக்கான் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார். இத்துடன், சொகுசு வாகனங்கள் மற்றும் லைஃப் ஸ்டைல் பிராண்டுகளிலும் நடிகர் ஷாருக்கான் முதலீடு செய்துள்ளார். இந்த வருமானங்கள் அனைத்தும் அவரது சொத்து மதிப்பை ரூ.12,490 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.