Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிவகார்த்தியன் குறித்து நான் ஆச்சர்யப்படவில்லை” ; நடிகர் ஷாம்.

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக  நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

வரும் மார்ச்-7ஆம் தேதி இந்தப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது. இதையடுத்து ‘அஸ்திரம்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

படத்தின் நாயகன் ஷாம் பேசும்போது, “பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமான அரவிந்த் ராஜகோபால் நான் படம் இயக்கப் போகிறேன் அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என என்னை தொடர்பு கொண்டார். அதன் பின் அரவிந்த், கதாசிரியர் ஜெகன் இருவரும் என்னை நேரில் சந்தித்தனர். அவர்கள் சொன்ன கதை ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. இதுவரை பல த்ரில்லர் படங்களை ரசித்து பார்த்து உள்ளோம். இந்தப் படத்தில் ஒரு தனித்துவமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் கதையை திரில்லர் வடிவத்தில் கொடுத்தது மற்ற படங்களில் இருந்து இதை வித்தியாசப்படுத்துகிறது. இதன் திரைக்கதையும் சுவாரசியமாக இருந்தது.

இயக்குநர் அரவிந்த் டைரக்சனுக்கு புதியவர் என்றாலும் சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றிய அனுபவம், சில படங்களில் நடித்த அனுபவம் எல்லாமே அவரிடம் இருந்தது. அவரது பேச்சிலும் தன்னம்பிக்கை தெரிந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஈரோட்டை சேர்ந்தவர். கடுமையாக உழைத்து முன்னேறியவர். இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டவர், இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் ஒரே கட்டமாக ஆக 30 நாட்கள் நடைபெற இருப்பதால் மொத்தமாக தேதிகளை வழங்கினால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டார்.

புது இயக்குநர் என்பதால் 15 நாட்களாக பிரித்து படப்பிடிப்பை நடத்தலாமே  என்று கூட நான் சொன்னேன். ஆனால் இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அது மட்டுமல்ல எந்த வித பிரச்சனைகளாலும் படம் நின்று விடக்கூடாது என்பதற்காகத்தான் என் சொந்த பணத்தை மட்டுமே வைத்து படம் எடுக்கிறேன் என நம்பிக்கையுடன் கூறினார். அவர் கூறியது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. சொந்தப் பணம் போட்டு படம் எடுப்பவர்கள் சினிமாவில் ரொம்பவே குறைவானவர்கள் தான். அதனால் தான் இந்த படம் திட்டமிட்டபடி எந்த தடங்கலும் இன்றி அழகாக நிறைவு பெற்று இப்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இயக்குநர் அரவிந்த் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தன்னுடைய வேலையை விட்டுவிட்டு சினிமா மீது இருந்த ஆர்வத்தால் இந்த படத்தை பண்ணுகிறார் என்பதை உணர்ந்து கொண்டு அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய அவருடைய நண்பர்கள் அனைவரும் அவருக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

அப்படி ஒரு பிரண்ட்ஷிப்பை இப்போதுதான் நான் சந்திக்கிறேன். அரவிந்த் அந்த வகையில் ரொம்பவே லக்கி என்று சொல்லலாம். அதேபோல படப்பிடிப்பின் முதல் நாளில் இருந்து ஒரு அனுபவமிக்க இயக்குநர் போலவே எல்லாவற்றையும் அழகாக கையாண்டார் அரவிந்த்.

வாரிசு திரைப்படம் எனக்கு ஒரு கம் பேக் படமாக அமைந்தது. அதற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்த ‘அஸ்திரம்’ படம் எனக்கு மிக முக்கியமான படம். இந்த படத்தின் கதையை எழுதியுள்ள ஜெகன் பார்ப்பதற்கு சிறியவராக தோன்றினாலும் சினிமா பற்றிய அறிவு மிகுதியாக உள்ளவர். படம் என்ன கேட்கிறதோ அதை மட்டுமே, அழகாக திரைக்கதையாக எழுதியுள்ளார். ஒரு அற்புதமான மெசேஜும் இந்த படத்தில் இருக்கிறது.

படம் பார்க்கும் அனைவருமே அதை மனதார ஒப்புக் கொள்வார்கள். இந்த படத்தில் நடித்துள்ள ரஞ்சித் இதில் அறிமுகமாகி இருக்கிறார். கிட்டத்தட்ட 20 நாட்கள் ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பில் எந்தவித தயக்கமும் குழப்பமும் இன்றி அழகாக நடித்துள்ளார். நடிகர் ஜீவா ரவியும் இந்த படத்தில் தான் நடித்துள்ள ஜேம்ஸ் கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகி நிரா மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். 'நீ போதும்' என்கிற ஒரு மியூசிக் ஆல்பத்தில் அவரை பார்த்தபோது இவர் நமது படத்திற்கு சரியாக இருப்பார் என அரவிந்திடம் கூறினேன். அதற்கேற்ற மாதிரி படத்திலும் நிரா சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவர் ஒரு பிசியான ஹீரோயினாக மாறுவார். படத்தில் பணியாற்றிய அனைவரிடமும் பாசிட்டிவான எண்ணங்களே அதிகம் இருந்தன. அதை படத்தில் நடித்த ஒவ்வொரு கணமும் உணர முடிந்தது.  ஒளிப்பதிவாளர் கல்யாண் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்" என்று கூறினார்.

* அஸ்திரம் படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகர் ஷாம் !

12பி படம் மூலம் எனக்கு மிகப்பெரிய அறிமுகம் கிடைத்தது. மேலும் பெரிய அளவில் நான் போராடி சினிமாவில் ஒவ்வொரு படமாக நடிக்கவில்லை. எல்லாம் தானாகவே நடந்தது. அதேசமயம் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து தனது வாழ்க்கையை துவங்கி இன்று மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வெற்றியை கண்டிருக்கிறார்.

அவருடைய உயரம் ஆச்சரியம் கிடையாது ஏனெனில் அதற்கு பின்னணியில் கடின உழைப்பும் மிகப்பெரிய போராட்டமும் நிறைந்திருக்கிறது. எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் வந்த சிவகார்த்திகேயன் இன்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். ஒருமுறை அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் ஜட்ஜ் ஆக கலந்து கொண்டேன். அப்போதே அவரிடம் உனக்குள் நல்ல திறமை இருக்கிறது வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள் பெரிய ஆளாக வருவாய் என சொல்லி இருந்தேன்.

அவர் இப்போதும் எங்கு என்னை பார்த்தாலும் ' அன்றைக்கு நீங்கள் சொன்னீர்களே சார்' என மறக்காமல் சொல்வார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலநேரம் இருக்கிறது. எனக்கான காலம் மீண்டும் கிடைத்திருக்கிறது இனி அதை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து படங்களில் நடிப்பேன். என்று கூறினார் நடிகர் ஷாம்.