Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46வது ஆண்டு பரிசளிப்பு விழா: சூர்யா பேச்சு

சென்னை: சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளையின் மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, 12ம் வகுப்பு தேர்வை நிறைவு செய்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கவுரவித்து வருகிறார். தனது 100வது படத்தின் போது சிவகுமார் தொடங்கிய இந்த அறக்கட்டளையின் 46வது ஆண்டு நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னை தியாகராய நகரிலுள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் நடந்தது. இவ்விழாவில் சிவகுமார் மற்றும் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசளித்து பேசினர். 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. மேலும், மூத்த ஓவியக்கலைஞர் மணியம் செல்வனின் கலைப்பணியை பாராட்டி, அவருக்கு 1 லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டது.

அப்போது சூர்யா பேசும்போது, ‘ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் ஜெயித்தவர்கள், எங்கள் வீட்டுக்கு வந்து சான்றிதழ் வாங்கிக்கொண்டு செல்வார்கள். இந்த கட்டிடத்தை ஒரு தாய் வீடு மாதிரி பார்க்கிறேன். எத்தனை கஷ்டமான சூழல் இருந்தாலும், மன வலிமை நம்மை ஜெயிக்க வைக்கும். இன்றைக்கு இல்லை என்றாலும், நாளை நீங்கள் ஜெயித்துவிட்டு வருவீர்கள். நம்பிக்கையுடன் நல்ல உறவுகள் மற்றும் நல்ல நட்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையை சமநிலையுடன் அணுகுங்கள்’ என்றார்.