Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆண்டுதோறும் சமூக சேவைக்கு ரூ.30 கோடி செலவிடும் மகேஷ் பாபு

ஐதராபாத்: தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் மகேஷ் பாபு, பல ஏழைகளுக்கு வாழ்வளித்தவர். 40க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மகேஷ் பாபுவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். திரைப்படங்கள் மூலம் கோடிக்கணக்கில் நடிகர் மகேஷ் பாபு சம்பாதிக்கிறார். எனவே ஒவ்வொரு ஆண்டும் ரூ.25 முதல் 30 கோடி வரை ஏழைகளுக்காக இவர் செலவிடுகிறார். மகேஷ் பாபு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரே ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையை நடத்தி வருகிறார். அங்கு ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுகிறார்.

மகேஷ் பாபு அறக்கட்டளை மூலமாக ஆந்திராவில் உள்ள புரிபாலம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள சித்தபுரம் ஆகிய இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்து பராமரித்து வருகிறார். மேலும், பியூர் லிட்டில் ஹார்ட்ஸ் அறக்கட்டளை, ரெயின்போ ஹார்ட் இன்ஸ்டியூஷன் மூலமாக 1000க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைகள் என பல்வேறு வகையில் உதவி வருகிறார். மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு ரூ.535 கோடி. ஐதராபாத்தில் அவருக்கு சொந்தமாக இருக்கும் பங்களாவின் மதிப்பு ரூ.30 கோடி. ஜூப்ளி ஹில்ஸில் உள்ள இந்த வீட்டில் கிட்டத்தட்ட அனைத்து ஹைடெக் வசதிகளும் உள்ளன. மகேஷ் பாபுவிடம் 7 கோடி மதிப்புள்ள வேனிட்டி வேன் உள்ளது.