Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கங்கையில் ரஹ்மான் கண்டெடுத்த பாடல்

பூஷன் குமார் தயாரிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘தேரே இஷ்க் மே’ என்ற படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘அவளிடம் சொல்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. தனுஷ், கிரித்தி சனோன் நடித்த இப்படம், வரும் 28ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. முதல் பாடலான ‘ஓ காதலே’, ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து, பல இசைத்தளங்களை ஆட்கொண்டிருந்த நிலையில், தற்போது டிசீரிஸ், கலர் யெல்லோ புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்ட 2வது பாடலான ‘அவளிடம் சொல்’, ரசிகர்கள் மனதில் ஊடுருவியுள்ளது. மஷூக் ரஹ்மான் எழுதிய இதை ஏ.ஆர்.அமீன், ஜொனிடா காந்தி இணைந்து பாடினர். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ‘நான் இசை அமைத்த ‘அவளிடம் சொல்’ என்ற பாடல், ஹிமாச்சலுக்கு நான் சென்றபோது, கங்கை நதியில் பிரதிபலிக்கும் மலைகளை பார்த்து கிடைத்த உணர்வில் இருந்து பிறந்தது.

அந்த இயற்கையின் அமைதியில் இருந்து பியானோ, ஸ்ட்ரிங்ஸ், புதிய குரல் நிதேஷ் ஆகியோருடன் எளிமையான மற்றும் ஆன்மிகம் கலந்த இசை உருவானது. இதை நான் உருவாக்கியபோது உணர்ந்ததை மக்களும் கேட்டு உணர வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றார். ஆனந்த் எல்.ராய் கூறும்போது, ‘இசை என்பது மிகவும் வலிமையான ஒரு மாயம் என்று சொல்வேன். அந்த மாயத்தை நேரில் உருவாக்கும் அற்புதமான மந்திரவாதி ஏ.ஆர்.ரஹ்மான். அவருடன் நான் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. ‘அவளிடம் சொல்’, அவரது இதயத்தில் இருந்து வந்த மற்றொரு ரத்தினம்’ என்றார். ஹிமான்ஷு ஷர்மா, நீரஜ் யாதவ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.