தற்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார், சூரி. இனி அவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பார். காமெடி வேடத்தில் நடிக்க மாட்டார் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். அவரும், அஜித் குமாரும் ‘சிறுத்தை’ சிவா இயக்கிய ‘வேதாளம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்படத்துக்கு பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், அஜித் குமாருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ள சூரி, அதற்கு கீழே வியப்புடன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘அஜித்தை பார்த்த நொடியிலேயே எனக்கு புரிந்த ஒரு விஷயம், உண்மையான வெற்றி என்பது உருவாக்கப்படுவது இல்லை.
அது நாள்தோறும் கடின உழைப்பாலும், மனதிலுள்ள வலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அஜித்துடன் நடந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும், ஆழமான அர்த்தம் கொண்டதாக இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டில் அஜித் குமார் நடிப்பில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இதையடுத்து கார் பந்தயத்தில் அதிக கவனம் ெசலுத்தி வரும் அவர், தனது புதுப்படம் குறித்து அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்த படத்தையும் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக தகவல் வெளியானது. இதில் மீண்டும் அஜித் குமாருடன் நடிக்க சூரி ஆவலுடன் காத்திருக்கிறார்.
