Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ராஷ்மிகாவுக்கு கடும் எதிர்ப்பு

சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘கொடவா சமூகத்தில் இருந்து எனக்கு முன்பு சினிமாவில் நடிக்க யாரும் வந்ததில்லை. முதல் நபர் நான்தான்’ என்று சொன்ன அவரது கருத்துக்கு கொடவா சமூகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனாவை கன்னட நடிகை பிரேமா தாறுமாறாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ‘கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த நடிகர்களின் உண்மையான விவரங்கள், கொடவா சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு நன்கு தெரியும். இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அவர் சொன்ன கருத்துக்கு அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்.

எனக்கு முன்பே கொடவா சமூகத்தை சேர்ந்த சசிகலா சினிமாவில் நடிக்க வந்தார். பிறகு நான் நடிக்க வந்தேன். எங்களை தொடர்ந்து கொடவா சமூகத்தை சேர்ந்த பலர் நடிக்க வந்து வெற்றிபெற்றுள்ளனர்’ என்றார். கன்னட நடிகை நிதி சுப்பையா கூறுகையில், ‘ராஷ்மிகா சொல்வது ஜோக் மாதிரி இருக்கிறது. இதுபோன்ற கருத்தை முன்வைத்ததால், அது உண்மையாகி விடாது. இதை மிகப்பெரிய பிரச்னையாக நினைக்க வேண்டாம். ராஷ்மிகா மந்தனா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கொடவா சமூகத்தில் இருந்து வந்த பிரேமா, கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார். என்றாலும், ராஷ்மிகா மந்தனா ஏன் இப்படி பேசினார் என்று தெரியவில்லை’ என்றார்.