Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுமோ விமர்சனம்

சென்னையில் வசிக்கும் சர்ஃபிங் விளையாட்டு வீரர் மிர்ச்சி சிவா, கடற்கரையில் ஒதுங்கியிருந்த ராட்சத மனிதரை மீட்டு, தான் பணிபுரியும் விடிவி கணேஷின் உணவகத்துக்கு அழைத்து வருகிறார். குழந்தையின் மனநிலை கொண்ட அந்த மனிதருக்கு பழைய நினைவுகள் வராததால், எதுவும் பேச முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், அவர் யார் என்று மிர்ச்சி சிவா கண்டுபிடிக்கிறார். ஜப்பானில் பிரபலமான சுமோ மல்யுத்த வீரர் என்ற விஷயம் அறிந்ததும் அவருடன் ஜப்பானுக்கு செல்கிறார் அதன் பிறகு நடப்பது மீதி கதை.

திரைக்கதை, வசனம் எழுதியுள்ள மிர்ச்சி சிவா, இப்படத்திலும் வழக்கமான ஸ்டைலிலேயே நடித்துள்ளார். அவரது காதலியாக வரும் பிரியா ஆனந்தை ஒருதலையாக காதலித்து மொக்கை வாங்கும் காமெடியனாக யோகி பாபு, சுமோ வீரரை கண்டாலே டென்ஷனாகும் விடிவி கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ், தண்ணியடிக்கும் தமிழாசிரியர் நிழல்கள் ரவி, சேத்தன், சுரேஷ் சக்ரவர்த்தி, ஜப்பான் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் ஏஜெண்ட் ஸ்ரீநாத் என்று, அவரவர் பாணிக்கு காமெடி செய்திருக்கின்றனர். ஜப்பானை சேர்ந்த நிஜ சுமோ வீரர் யோஷினோரி தாஷிரோ, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 170 கிலோ எடை கொண்ட அவர், ஜப்பானில் பங்கேற்கும் சுமோ மல்யுத்த விளையாட்டு போட்டியில் அதிரடி சாகசங்கள் செய்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறார்.

ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு, காட்சிகளை கண்களுக்கு இதமாக கடத்தியிருக்கிறது. நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை கச்சிதம். கதை எழுதி இயக்கியுள்ள எஸ்.பி.ஹோசிமின், உலகிலேயே வலிமையான ஆயுதம் அன்பு மட்டுமே என்பதை சொல்லியிருக்கிறார். அதை இன்னும் சுவாரஸ்யமாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கலாம்.