Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திறமையான நாயகியாக திரையுலகை ஆட்டிப் படைத்தவர் சரோஜாதேவி காலமானார்: சோகத்தில் மூழ்கிய திரையுலகம், ரசிகர்கள்

சென்னை: திரையுலகில் தொடர்ந்து 17 ஆண்டுகள் முன்னணி இடத்தில் இருந்த நடிகை சரோஜாதேவி, பெங்களூருவில் இருக்கும் தனது வீட்டில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என்றும், ‘கன்னடத்துப் பைங்கிளி’ என்றும் அழைக்கப்பட்ட சரோஜாதேவி, தென்னிந்திய படவுலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். ‘மகாகவி காளிதாஸ்’, ‘நாடோடி மன்னன்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பாலும் பழமும்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைகாக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’ உள்பட பல படங்கள், அவரது நடிப்பில் தனி முத்திரையை பதித்தன.

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை அவருக்கு உண்டு. திரைத்துறையில் சரோஜாதேவி ஆற்றிய பங்களிப்புக்காக, ஒன்றிய அரசிடம் இருந்து பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய உயரிய விருதுகள் பெற்றார். கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்ற பட்டமும், தமிழக அரசின் ‘எம்.ஜி.ஆர் விருது’, ஆந்திர அரசின் ‘என்.டி.ஆர் தேசிய விருது’, பெங்களூரு பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம், 2008ல் வாழ்நாள் சாதனையாளருக்கான ஒன்றிய அரசின் தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகள் வென்று சாதனை படைத்தார். தனது முதல் படத்திலேயே ஹீரோயினாக நடிக்க தொடங்கிய அவர், தொடர்ந்து 17 ஆண்டுகள் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

பெங்களூருவில் கடந்த 1938 ஜனவரி 7ம் தேதி ஜாவர் பைரப்பா, ருத்ரம்மா தம்பதியின் 4வது மகளாக பிறந்த சரோஜாதேவியின் தந்தை பெங்களூருவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றினார். பெங்களூருவில் புனித தெரசா பள்ளியில் படித்த சரோஜாதேவி, பள்ளிகளுக்கு இடையே நடந்த இசைப் போட்டியில் இந்தி பாடல் ஒன்றை பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதர் வந்திருந்தார். சரோஜாதேவியின் பாடலை கேட்ட அவர், ‘இந்த பெண் நன்றாக பாடுகிறாள்.

இவரை சினிமாவில் பின்னணி பாட வைக்கலாம்’ என்று நினைத்து, உடனே அவரை ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்று, குரல் வளத்துக்கான ஆடிஷன் நடத்தினார். அப்போது அவர், ‘சரோஜாதேவியை நடிகையாக்கினால் என்ன?’ என்று யோசித்தார். பிறகு ஹொன்னப்ப பாகவதர், தான் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னட படத்தில், சரோஜாதேவியை ஹீரோயினாக அறிமும் செய்தார். ராதாதேவி என்ற இயற்பெயரை, திரையுலகிற்காக சரோஜாதேவி என்று மாற்றிக்கொண்டார். 1955ல் ஹொன்னப்ப பாகவதர் தயாரிப்பில் வெளியிடப்பட்ட ‘மகாகவி காளிதாஸ்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் குவிந்தது.

1958ல் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் சரோஜாதேவி தமிழ் படவுலகில் அறிமுகமானார். அவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்த படம், எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்’ படமாகும். 1959ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘கல்யாணப் பரிசு’ படம், தமிழ் சினிமாவில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது. தொடர்ந்து, ‘வாழ வைத்த தெய்வம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பாலும் பழமும்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பாசம்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைகாக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’, ‘குலவிளக்கு’, ‘தாய்மேல் ஆணை’ போன்ற படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக்கொடி நாட்டினார்.

கடைசியாக சரோஜாதேவி தமிழில் நடித்த படம், ‘ஆதவன்’. 2009ல் வெளியான இப்படத்தில் சூர்யா, நயன்தாரா நடித்திருந்தனர். 1967ல் ஸ்ரீஹர்ஷா என்பவரை சரோஜாேதேவி திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீஹர்ஷா பி.ஈ பட்டம் பெற்ற இன்ஜினீயர். புவனேஸ்வாி என்ற தனது அக்கா சீதாதேவியின் மகளை தத்தெடுத்து வளர்த்த சரோஜாதேவி, திருமணத்துக்கு பிறகு தனது கணவரின் அனுமதியுடன் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

திரைத்துறையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த சரோஜாதேவி, சினிமாவில் தனது நடிப்புக்கென தனி பாணியை உருவாக்கினார். ஆடை மற்றும் அணிகலன்கள், சிகை அலங்காரம் உள்பட அனைத்து விஷயங்களிலும் புதுமையை புகுத்தினார். நடை, உடை, பாவனைகளில் பல்வேறு அபிநயங்களை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். பிறகு ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன் ஆகிய பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

1960-1970 காலக்கட்டத்தில் பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி ஆகியோர், முப்பெரும் முன்னணி கதாநாயகிகளாக கருதப்பட்டனர். சரோஜாதேவியின் 100வது படம், ‘பெண் என்றால் பெண்’ என்ற தமிழ் படமாக அமைந்தது. பெங்களூரில் மல்லேஷ்வரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, வயது மூப்பு காரணமாக அவர் நேற்று காலை காலமானார். அவரது மறைவையொட்டி வீட்டின் வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

* முக்கியமான விருதுகள்

1965ல் கர்நாடக அரசு வழங்கிய ‘அபிநய சரஸ்வதி’ பட்டம். 1969ல் ஒன்றிய அரசு அளித்த பத்மஸ்ரீ விருது. 1980ல் கர்நாடக அரசு வழங்கிய ‘அபிநந்தன் காஞ்சனா மாலா’ விருது. 1989ல் கர்நாடக அரசு வழங்கிய ‘ராஜ்யோத்சவ’ விருது. 1992ல் ஒன்றிய அரசு அளித்த பத்ம பூஷண் விருது. 2008ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் தேசிய விருது.

* அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

சரோஜாதேவி உடலுக்கு இன்று மதியம் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

* எம்.ஜி.ஆருடன் அதிக படங்கள்

1965க்கு பிறகு தமிழ் திரையுலகில் கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா ஆகியோரின் வருகை அதிரடியாக அமைந்ததால், சரோஜாதேவிக்கு வரவேண்டிய புதுப்பட வாய்ப்புகள் குறைந்தது. அவர் கன்னடத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் படவுலகை பெரிதும் நேசித்தார். ‘எனது பிறவிப்பயன்’ என்று தமிழ் மொழியையும், தமிழ் திரையுலக ரசிகர்களையும் பற்றி அடிக்கடி குறிப்பிட்டு பேசிய அவர், ‘தமிழ் ரசிகர்கள் எனக்கு அளித்த மிகப்பெரிய வரம்தான் முன்னணி நடிகையாக இருந்தது’ என்று சொல்லியிருந்தார். கே.சங்கர் இயக்கத்தில் ‘சாட்டையடி’ என்ற படத்தில் ஜெய்சங்கருடன் இணைந்து நடித்தபோது, சரோஜாதேவிக்கு குழந்தை பிறந்ததால், அப்படத்தை மேற்கொண்டு உருவாக்க முடியாமல் நிறுத்தப்பட்டது.

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆருடன் 26, சிவாஜி கணேசனுடன் 22, ஜெமினி கணேசனுடன் 17 படங்களில் நடித்து சாதனை படைத்த சரோஜாதேவி, ஒருகாலத்தில் ‘சூப்பர் ஸ்டார்’களை விட அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பெங்களூருவை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஜாவர் பைரப்பா, ருத்ரம்மா தம்பதியின் 4வது மகளாக பிறந்து, ராதாதேவி என்ற பெயருடன் வளர்ந்த சரோஜாதேவிக்கு சரஸ்வதி தேவி, பாமா தேவி, சீதா தேவி ஆகிய அக்காக்களும், வசந்தா தேவி என்ற தங்கையும் இருக்கின்றனர்.

* வைஜெயந்தி மாலாவுடன் போட்டி

1970களின் இறுதியில் சரோஜாதேவிக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர், வைஜெயந்தி மாலா. இயக்குனர் ஸ்ரீதரின் ‘கல்யாணப் பரிசு’, அதன் தெலுங்கு பதிப்பான ‘பெல்லி காணுக’ ஆகிய படங்களில் சரோஜாதேவி ஹீரோயினாக நடித்தார். ஆனால், இந்தி பதிப்பு ‘நஸ்ரானா’ படத்தில் வைஜெயந்தி மாலா நடித்தார். அப்போது எல்.வி.பிரசாத்தின் ‘சுக்ரால்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் சரோஜாதேவி. ஒரே நாளில் இவ்விரு படங்களும் வெளியானதில், ‘சுக்ரால்’ மிகப்பெரிய வெற்றிபெற்றது.

கடுமையான விமர்சனங்களை சந்தித்தது ‘நஸ்ரானா’. அன்றைய தமிழ் சினிமா ஹீரோயின்களான தேவிகா, பி.பானுமதி ராமகிருஷ்ணா, வைஜெயந்தி மாலா, பத்மினி ஆகியோரிடம் இருந்து சரோஜாதேவியை தனித்து காட்டியது, அவரது தனி பாணியிலான நடிப்பு. டிரெஸ்ஸிங், மேக்கப், ஹேர் ஸ்டைல், நடை, உடை, பாவனை ஆகியவற்றில் சரோஜாதேவி தனி பாணியை கையாண்டார்.

* நடனமாட வந்து ஹீரோயின் ஆனவர்

1967 மார்ச் 1ம் தேதி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீஹர்ஷாவுக்கும், சரோஜாதேவிக்கும் திருமணம் நடந்தது. அப்போது சரோஜாதேவி கடுமையான நிதி நெருக்கடி மற்றும் வருமான வரி சிக்கலை எதிர்கொண்டார். இதையெல்லாம் சமாளிக்க அவரது கணவர் உதவி செய்தார். 1967க்கு பிறகு தனது தாயின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். அவரது கணவரும் அனுமதி கொடுத்தார். அவர்களது திருமண வாழ்க்கை 1986ல் ஸ்ரீஹர்ஷா இறக்கும் வரை நீடித்தது. தமிழில் சரோஜாதேவிக்கு முதல் ஹீரோயின் வாய்ப்பு அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. ‘தங்கமலை ரகசியம்’ என்ற படத்தில் 250 ரூபாய் சம்பளத்துக்கு ஆட வந்த அவர், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.

எம்.ஜி.ஆர் முதன்முதலில் இயக்கிய ‘நாடோடி மன்னன்’ என்ற படத்தில் ஹீரோயினாக சரோஜாதேவியை நடிக்க வைக்க முயற்சித்தார். ஆனால், ஒரு பாடலுக்கு நடனமாடியவரை ஹீரோயினாக நடிக்க வைப்பதா என்று பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதோடு, சரோஜாதேவியின் தமிழ் உச்சரிப்பும் பெரும் இடையூறாக இருந்தது. ஆனால், மேக்கப் டெஸ்ட்டில் அசத்திய சரோஜாதேவி, ‘நாடோடி மன்னன்’ படத்தில் இளவரசி ரத்னா கேரக்டரில் ஜொலித்தார். ரத்னா கேரக்டர் அவரை தமிழகத்தின் பட்டிதொட்டி முழுக்க கொண்டு போய் சேர்த்தது. அவரை திரையில் பார்த்த ரசிகர்கள், ‘ஒரு பக்கம் பார்த்தால் பத்மினி, மறு பக்கம் பார்த்தால் வைஜெயந்தி மாலா’ என்று புகழ்ந்தனர்.

* சரோஜா தேவியின் கண்தானம்

பெங்களூருவில் காலமான நடிகை சரோஜாதேவி, திரையுலகில் பல சாதனைகள் படைத்து அனைவரின் பாராட்டு பெற்றிருந்தார். அவர் தனது வருமானத்தில் பல்வேறு நல உதவிகள் எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் செய்துள்ளார். அவர் பிறந்த ஊரான தசவார கிராமத்தில் ஆரம்ப பள்ளி முதல் உயர்நிலை பள்ளி வரை 3 அரசு பள்ளிகளுக்கு சொந்த பணத்தில் கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார். மேலும் தான் இறந்த பின் தனது கண்களை தானமாக எடுத்து கொள்ளும்படி எழுதி கொடுத்துள்ளார். அதன்படி மணிப்பால் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்ததும் டாக்டர்கள் கண்களை எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் சரோஜாதேவி மனிதநேயம் கொண்டவர் என்பதை நிரூபித்துள்ளார்.