சென்னை: ‘வட சென்னை’, ‘இந்தியன் 2’, ‘ஜெயில்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா ரவிச்சந்திரன். ‘பேட் கேர்ள்’ படத்தில் நாயகியின் தோழியாக நடித்து புகழ் பெற்றார். இப்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’, விஜய் ஆண்டனியின் ‘லாயர்’, மேலும் 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியது: பல படங்களில் நடித்தாலும் ‘பேட் கேர்ள்’ படம் எனக்கு நல்ல பெயரை கொடுத்திருக்கிறது.
இதற்காக இயக்குனர் வர்ஷாவுக்கும் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சாருக்கும் நன்றி. ‘உன்னுடைய கேரக்டர் நல்லா ரீச் ஆகியிருக்கே’ என கூறி வெற்றிமாறன் சார் பாராட்டியது மறக்க முடியாது. இன்று திரைக்கு வரும் ‘தண்டகாரண்யம்’ படத்திலும் நடித்துள்ளேன். தொடர்ந்து நல்ல, கனமான வேடங்களை ஏற்கவே விரும்புகிறேன்.
தமிழ் பெண்கள் பலரும் நிறைய கனவுகளுடன் நடிக்க வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு கதவுகள் திறப்பதுதான் குறைவாக இருக்கிறது. அழுக்கான, சோகமான வேடங்களே எனக்கு தரப்படுவதில் வருத்தம் இருக்கிறது. சினிமாவில் இருந்தும் என்னை அன்லக்கியாகவே நினைக்கிறேன். காரணம், எனக்கான திருப்புமுனை கேரக்டருக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு சரண்யா ரவிச்சந்திரன் கூறினார்.