Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மலையாள படவுலகில் தமிழ் இயக்குனர்கள் புறக்கணிப்பு: ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டு

சென்னை: எஸ்விகேஏ மூவிஸ் சார்பில் எஸ்.சஞ்சய் குமார், எஸ்.அருண் குமார், எஸ்.ஜனனி தயாரித்துள்ள படம், ‘என் சுவாசமே’. ஆதர்ஷ், சான்ட்ரா, லிவிங்ஸ்டன், குலப்புள்ளி லீலா, அம்பிகா மோகன், சாப்ளின் பாலு நடித்துள்ளனர். ஆர்.மணி பிரசாத் ஒளிப்பதிவு செய்து இயக்க, பிஜே இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது: இப்படத்தை மலையாள கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். கேரளாவில் இருந்து நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு வருகின்றனர். ஒருகாலத்தில் கவர்ச்சியான படங்களை கொடுத்த மலையாள திரையுலகம், இன்று இந்தியாவிலேயே அதிக தரமான படங்களை கொடுக்கும் வகையில் மாறியுள்ளது. மலையாள நடிகர்கள் சங்கம், சின்ன நடிகர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், மிகவும் ஒற்றுமையாக இருந்து போராடுகிறது. அதேவேளையில், தமிழ் பட இயக்குனர்களுக்கு மலையாள திரையுலகம் வாய்ப்புகள் தருவதில்லை. யாராவது படம் இயக்க அங்கு சென்றால், ஏதாவது செய்து அதை தடுத்துவிடுகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் ஏராளமான மலையாள இயக்குனர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சினிமாவுக்கு ெமாழி, எல்லை போன்றவை கிடையாது என்பதை தமிழ் சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். இதை மலையாள கலைஞர்களும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விழாவுக்கு வந்துள்ள மலையாள படவுலகின் மூத்த கலைஞர் குலப்புள்ளி லீலா, இந்த விஷயத்தை மலையாள படவுலகினரிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும்.