Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழ் சினிமா மீது காதல்: சொல்கிறார் அர்ஷா சாந்தினி

சென்னை: மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அர்ஷா சாந்தினி பைஜூ, ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். அவர் கூறியது: மலையாள சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தாலும், தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எனது ஆசை தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் திறமைக்கு மதிப்பளிக்கிறார்கள். ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை மக்கள் கொண்டாடும் விதத்தை பார்த்து நான் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். திரையரங்கங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்தது புது அனுபவமாக இருந்தது.

ரசிகர்கள் படத்திற்கும், எனக்கும் கொடுக்கும் வரவேற்பு எனக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பிடிப்பேன், என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மலையாள சினிமா, தமிழ் சினிமா இரண்டுக்கும் பெரிய வித்தியாசமோ, வேறுபாடோ இல்லை. தமிழ் சினிமா மிகப்பெரிய துறை, மிகப்பெரிய திரைப்படங்கள் இங்கு எடுக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் நாயகிகளின் திறமைகள் அங்கீகரிக்கப்படுகிறது. தமிழ் சினிமா மீது எனக்கு மிகப்பெரிய காதல் உண்டு. நான் நடனக் கலைஞர், மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் என்பதால், நடனம் மற்றும் இசையை மையமாக கொண்ட கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.