Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கண்நீரா விமர்சனம்...

கதிரவென், சாந்தினி கவுர் இருவரும் காதலிக்கின்றனர். திருமணம் செய்துகொண்டு, ஒரு குடும்பமாக வாழ கதிரவென் ஆசைப்படுகிறார். திருமணத்துக்கு முன்பு வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று சாந்தினி கவுர் நினைக்கிறார். இதனால் அவர் திருமணத்தை தள்ளிப்போடுகிறார். தனது முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கும் அவரை கதிரவென் வெறுக்கிறார். அப்போது தனது அலுவலகத்தில் வேலைக்குச் சேரும் மாயா கிளம்மி மீது காதல் கொண்டு, தனது முதல் காதலை முறித்துக்கொண்டு, மாயா கிளம்மியிடம் கதிரவென் தனது காதலை வெளிப்படுத்துகிறார்.

ஆனால், வேறொருவரைக் காதலிக்கும் மாயா கிளம்மி, கதிரவெனின் காதலை நிராகரிக்கிறார். இறுதியில் யார், யாருடன் இணைந்தனர் என்பது மீதி கதை. மலேசியா திரைக்கலைஞர்கள் கதிரவென், சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என்.கே.ஆர் உள்பட அனைவரும் அந்தந்த கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளனர். படம் முழுக்க காதல் போராட்டம் தொடர்கிறது.

ஹரிமாறன் இசையில் கவுசல்யா.என் எழுதியுள்ள பாடல்கள், கதையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசை நகர்ந்துள்ளது. மலேசியா லொகேஷன்களை புதிய கோணத்தில் காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் ஏ.கணேஷ் நாயரைப் பாராட்டலாம். காதலை மாறுபட்ட கோணத்தில் சொன்ன கவுசல்யா நவரத்தினத்தின் கதைக்கு கதிரவென் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படத்தின் நீளத்தைக் குறைத்து, திரைக்கதையில் வேகத்தை அதிகரித்து இருக்கலாம்.