Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பணத்தை கரையான் அரித்த சம்பவம்; கூலி தொழிலாளி தம்பதிக்கு ரூ.1 லட்சம் தந்த ராகவா லாரன்ஸ்

சென்னை: சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சுக்கனாம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முத்துக்கருப்பியும் அவரது கணவர் குமாரும் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் தங்கள் மகளின் காதணி விழாவுக்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். தகர உண்டியலில் அவர் சேமித்து வைத்த பணத்தை, வீட்டிலேயே குழி தோண்டி புதைத்து பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அந்த உண்டியலில் 1 லட்சம் ரூபாய் சேர்த்துள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் முத்துக்கருப்பி அந்த தகர உண்டியலை எடுத்து திறந்து பார்க்கும்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தையும் கரையான் அரித்து சேதப்படுத்தி இருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கிறார் முத்துக்கருப்பி.

அரித்த ரூபாய் நோட்டுக்களை பார்த்து கண்ணீர் சிந்திய முத்துக்கருப்பி, தன் பிள்ளைகள் முன் அந்த ரூபாய் நோட்டை பார்த்து கதறி அழுத வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரது மனதையும் உருக வைத்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர், அந்த ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி மூலம் மாற்றித் தருவதற்கான பரிந்துரையை வங்கி மூலம் செய்திருந்தார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், தனது மாற்றம் தொண்டு நிறுவனத்தின் மூலம் முத்துக்கருப்பிக்கு உதவ முடிவெடுத்தார். இதையடுத்து தம்பதியை சென்னைக்கு வரவழைத்து, அவர்கள் இழந்த தொகையான 1 லட்சம் ரூபாயை அவர்களுக்கு பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.