Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

8 மணி நேரம்தான் நடிப்பேன்: தீபிகாவை தொடர்ந்து ராஷ்மிகா அதிரடி

ஐதராபாத்: ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ திரைப்படம் நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி நடந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், சமீபத்தில் நடிகைகளின் வேலை நேரம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருவதைக் குறிப்பிட்டு, தனது வேலை நேரம் குறித்து ராஷ்மிகா பேசியிருக்கிறார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கே.என்., ரஷ்மிகாவைப் பாராட்டி, “வேலை நேரத்தைப் பற்றி எந்தக் கோரிக்கையும் வைக்காத ஒரே நடிகை இவர்தான். நேரத்தை கவனிக்காமல் வேலையை பார்ப்பவர்” எனப் பாராட்டினார். ஆனால், உடனே இடைமறித்த நடிகை ரஷ்மிகா, ‘‘நான் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஆனால், இதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். இதைத் தொடர்ந்து செய்யமுடியாது. 8 மணி நேரத்திற்குமேல் அதிகமாக வேலைபார்ப்பது நமது வாழ்க்கையை உடல் நலத்தைக் கெடுத்துவிடும்.

இந்த அதிக நேர வேலையைத் தவிர்க்கவில்லை என்றால் பின்னர் நாமே வருந்த வேண்டி வரும். உடல் நலமும், மனநலமும் கெட்டுவிடும். அலுவலகங்களில் 9-5 என்று வேலை நேரம் உள்ளதுபோல், சினிமாத்துறையில் நமக்கும் அப்படியே இருக்க வேண்டும். அப்படியில்லாததால் மறுப்பு சொல்ல முடியாமல் நான் பல வேலைகளைச் செய்கிறேன். இருப்பினும் நான் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க விரும்புகிறேன். குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம். எதிர்காலத்தை நினைத்து நான் இப்போது கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.