சென்னை: மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள படம், ‘பைசன்: காளமாடன்’. அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட், நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சமீர் நாயர், தீபக் சைகல், பா.ரஞ்சித், அதிதி ஆனந்த் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால், அழகம்பெருமாள், ரேகா நாயர், லிஸி ஆண்டனி, சுபத்ரா ராபர்ட் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் 17ம் தேதியன்று திரைக்கு வரும் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அப்போது துருவ் பேசியதாவது: இந்த படத்தில் பணியாற்றியது, வேறொரு உலகத்திற்குள் சென்று வந்த மாதிரி இருந்தது. பசுபதி என் தந்தையின் முதல் படத்தில் வில்லனாகவும், அடுத்த படத்தில் அண்ணனாகவும், ‘பைசன்’ படத்தில் எனக்கு தந்தையாகவும் நடித்ததை ஸ்பிரிச்சுவல் சைக்கிளாகவே பார்க்கிறேன். ஒரு சித்த மருத்துவர், ‘இதுவரை நான் எந்த படத்தையும் பார்த்ததில்லை. ஆனால், ‘பைசன்’ படத்தை பார்ப்பேன்’ என்று சொல்லி இருப்பது அதிக மகிழ்ச்சி அளித்துள்ளது. என் சிறுவயது முதலே அம்மா பெருமிதப்படும் அளவுக்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். படிப்பின் மூலம் அதை நிறைவேற்ற முடியவில்லை. இந்த படத்தை அவர் பார்த்தால், கண்டிப்பாக பெருமிதப்படுவார் என்று நம்புகிறேன். ‘பைசன்’ படத்தில் ஏற்றுள்ள கேரக்டரில் இயல்பாக நடிக்க, ஒரு நடிகனாக நான் என்னவாக இருக்கிறேன் என்பதை மறக்க வேண்டியிருந்தது.
இந்த பயணத்தில் என்னை முழுமை யாக தொலைத்துவிட்டேன். அதாவது, இந்த படத்தில் அந்த கேரக்டராகவே நான் வாழ்ந்திருக்கிறேன். கடினமான காட்சிகளில் நடிக்கும்போது, எனது தந்தை விக்ரம் கண்முன் நிற்பார். அவர் அந்தளவுக்கு கஷ்டப்படும்போது, நம்மால் சிறிய அளவில் கூட முயற்சிக்க முடியாதா என்று யோசிப்பேன். என்னால் விக்ரம் போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அவரது மகனாக இருக்க என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை. அந்த தகுதியை அடைய எல்லா வேலைகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். நன்றி அப்பா. இதுபோல் ஒரு படத்தை கொடுத்த எனது குரு மாரி செல்வராஜூக்கு மிகவும் நன்றி.