Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டிரெண்டிங் விமர்சனம்...

சென்னையை சேர்ந்த கலையரசனும், பிரியாலயாவும் யூடியூப்பில் டிரெண்டிங் தம்பதியாக பிரபலமாக இருக்கின்றனர். தினமும் தங்கள் சோஷியல் மீடியாவில் ரீல்ஸ், ஸ்டோரி, வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி, கந்துவட்டிக்கு கடன் வாங்கி, அதை அடைக்க முடியாமல், ரவுடிகளால் அடிக்கடி மிரட்டப்படுகின்றனர். இந்நிலையில், வங்கி கடன் மூலம் மிகப்பெரிய வீட்டை வாங்கி குடியேறுகின்றனர்.  அப்போது திடீரென்று அவர்களின் யூடியூப் சேனல் டெலிட் ஆகிறது.

வருமானம் இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு ஒரு பிரைவேட் நம்பரில் இருந்து அழைப்பு வருகிறது. வீட்டுக்குள் சிசிடிவி கண்காணிப்பில் நடக்கும் ஒரு ரியாலிட்டி ஷோவில் விளையாடி ஜெயித்தால், 2 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும் என்று முகமூடி அணிந்த மர்ம மனிதர் சொல்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. படம் முழுக்க கலையரசனும், பிரியாலயாவுமே ஆக்கிரமித்துள்ளனர். கேரக்டருக்கு ஏற்ப அவர்கள் நன்றாக நடித்துள்ளனர்.

திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும் பிரேம் குமார், தம்பதியை மிரட்டும் பெசன்ட் ரவி மற்றும் வித்யா போர்ஜியா கவனத்தை ஈர்க்கின்றனர். முகமூடி அணிந்த மர்ம மனிதர் அலெக்சாண்டரின் முகத்தை கடைசிவரை படத்தில் காட்டவே இல்லை. ஒரே வீட்டுக்குள்ளேயே இக்கதை நடந்தாலும், பல்வேறு கோணங்களில் பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு காட்சிகளை நகர்த்த உதவியிருக்கிறது.

நாகூரான் ராமச்சந்திரனின் கத்தரி, காட்சிகளை குறைத்திருக்கலாம். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை பலம் சேர்த்துள்ளது. டாஸ்க், ட்விஸ்ட், எமோஷன்ஸ் என்று தொடர்வது சோர்வு தந்தாலும் கூட, சோஷியல் மீடியாக்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சொல்லி, மனிதர்களை எச்சரித்து இருக்கிறார் இயக்குனர் சிவராஜ்.