Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஒருவரது வாய்ப்பை இன்னொருவர் பறித்த திரிஷா, நயன்தாரா

சென்னை: இராம.நாராயணன் இயக்கத்தில் கடந்த 1990ல் திரைக்கு வந்த படம், ‘ஆடிவெள்ளி’. இதில் சீதா, நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர் நடித்தனர். முக்கிய வேடங்களில் யானை, பாம்பு நடித்திருந்தன. யானைக்கு ‘வெள்ளிக்கிழமை ராமசாமி’ என்று பெயரிட்டிருந்தனர். சங்கர்-கணேஷ் இசையில் உருவான பாடல்கள் ஹிட்டானது. மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படம் காமெடியும், ஆன்மீகமும் கலந்து உருவாகியிருந்தது. தற்போது இது பான் இந்தியா படமாக தயாராகிறது.

இராம.நாராயணனின் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்.ராமசாமியின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. உலகில் தீயசக்திகள் வீறுகொண்டு எழும்போது, தெய்வீக சக்தி விழித்துக்கொள்கிறது என்ற கருத்துடன் உருவாகும் இப்படத்தை ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘ரேஞ்சர்’, ‘ஜாக்சன் துரை 2’ ஆகிய தமிழ் படங்களின் இயக்குனர் பி.வி.தரணிதரன் எழுதி இயக்குகிறார்.

‘இராம.நாராயணன் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்ற அறிவிப்புடன் வெளியாகும் இப்படத்தில், ‘ஜங்கிள் புக்’ படத்துக்கு அகாடமி விருது வென்ற சிஜி நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சீதா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழுவினர் திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

முன்பு ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி முயற்சித்தபோது நடக்கவில்லை. பிறகு அப்படத்தை சுந்தர்.சி இயக்க, நயன்தாரா நடித்து வருகிறார். அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது திரிஷாவின் நீண்ட நாள் கனவு. அதை ‘ஆடிவெள்ளி’ ரீமேக் நிறைவேற்றும் என்று தெரிகிறது. திரிஷா, நயன்தாரா இருவரும் ஒருவரது வாய்ப்பை இன்னொருவர் பறித்துக்கொண்ட சம்பவம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.