சென்னை: ஓடிடியில் வரவேற்பு பெற்ற ‘ராஜா கிளி’ என்ற படத்தின் மூலம் இயக்குனரான உமாபதி ராமய்யா, தனது தந்தை தம்பி ராமய்யாவுடன் மீண்டும் இணைந்துள்ள படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. முழுநீள அரசியல் கதை கொண்ட இப்படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ், காந்தாரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
நட்டி, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், விஜே ஆண்ட்ரூஸ், சத்யன், ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), கிங்காங், தேவி மகேஷ் நடிக்கின்றனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசை அமைக்கிறார்.
தங்கமணி எடிட்டிங் செய்ய, ஹசினி பவித்ரா அரங்கம் அமைக்கிறார். சாண்டி நடனப் பயிற்சி அளிக்க, மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகள் அமைக்கிறார். தம்பி ராமய்யா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுகிறார். தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறுகையில், ‘காமெடி யுடன் கூடிய அரசியல் படமாக உருவாகிறது. தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் போன்ற தேசிய விருது கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன்’ என்றார்.