Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாமன் விமர்சனம்...

பல வருட காத்திருப் புக்கு பிறகு அக்கா சுவாசிகா, மாமா பாபா பாஸ்கருக்கு பிறந்த மகனை, தாய்மாமன் சூரி உயிராக நினைத்து பாசத்தை பொழிகிறார். பிறகு சூரிக்கும், ஐஸ்வர்யா லட்சுமிக்கும் நடக்கும் காதல் திருமணம், அக்கா குடும்பத்தில் பெரிய பிரச்னையை ஏற்படுத்துகிறது. சூரியுடன் இருக்கும் அக்கா மகன் பிரகீத் சிவனின் குறுக்கீடு காரணமாக தனது தாம்பத்ய வாழ்க்கையையோ, ஹனிமூனையோ அனுபவிக்க முடியாமல் தவிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, கணவருடன் ஏற்பட்ட மோதலால், விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்புகிறார்.

இந்த நிலையில் அவர் கர்ப்பமாகிறார். ஒருபுறம் அக்கா மகன், மறுபுறம் தன்னை வெறுத்த மனைவிக்கு நடுவில் தவிக்கும் சூரி, உடைந்த குடும்பத்தை ஒருங்கிணைத்தாரா என்பது மீதி கதை. பேமிலி சென்டிமெண்ட் கதையில் கமர்ஷியல் கலந்து விட்டதால், ஆங்காங்கே சீரியல் தன்மை எட்டிப்பார்க்கிறது. 100 சதவீத அழுத்தமான குணச்சித்திர நடிப்பை வழங்கிய ஹீரோ சூரி, அக்கா மகனுக்காக உருகுவதும், அவனுக்காக மனைவியையே வெறுப்பதுமாக, மனதை உருக வைக்கிறார்.

கதையையும் அவரே எழுதியுள்ளார். அக்கா சுவாசிகா தரமான நடிப்பை வழங்கியுள்ளார். சூரியின் போட்டோவுக்கு மாலை அணிவித்ததை தனது அம்மா கீதா கைலாசத்திடம் சொல்லி கதறும் காட்சி உருக்கமானது. ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், ஐஸ்வர்யா லட்சுமி, மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோரின் நடிப்பு, படத்தை தாங்கி நிற்கும் தூண்கள். தவிர பாலசரவணன், ஜெயப்பிரகாஷ், பாபா பாஸ்கர், மேஜிக் மேன் விமல், சாயாதேவி, நிகிலா சங்கர் இயல்பாக நடித்துள்ளனர்.

தினேஷ் புருஷோத்தமனின் கேமரா நன்கு பதிவு செய்துள்ளது. ஹேஷாம் அப்துல் வஹாப் இசை அமைப்பில் பாடல்கள் கேட்கும் ரகம். மாமனிடம் இருந்து மகனை பிரிக்க, சூரியின் போட்டோவுக்கு மாலையணிவித்த டீச்சர் சுவாசிகா செயல் ஏற்க முடியாதது. அட்வைஸ் செய்வதற்காகவே ராஜ்கிரணை நடிக்க வைத்து வீணடித்துள்ளனர். எனினும், பெற்றோருக்கு நிகரான தாய்மாமன் உறவை சிறப்பிக்கும் இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் எழுதி இயக்கி இருக்கிறார். குடும்பத்துடன் பார்க்கலாம்.