Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இன்னொரு ஹீரோவின் படத்தை பாராட்டியதால் மேனேஜரை தாக்கினார் உன்னி முகுந்தன்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். அவர் நடித்து வெளியான மார்க்கோ படம் மலையாளம், இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் ஆக ஓடியது. சீடன் என்ற தமிழ் படத்தில் தான் உன்னி முகுந்தன் முதன்முதலாக அறிமுகமானார். சமீபத்தில் தமிழில் வெளியான கருடன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் நடிகர் உன்னி முகுந்தனின் மேனேஜர் விபின்குமார் கொச்சி இன்ஃபோபார்க் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பது: நான் கடந்த 18 வருடங்களாக சினிமாவில் உள்ளேன். நடிகர் உன்னி முகுந்தனிடம் 6 வருடங்களாக மேனேஜராக பணிபுரிந்து வருகிறேன். மார்க்கோ படத்துக்கு பிறகு அவரது படங்கள் ஓடவில்லை . இதனால் உன்னி முகுந்தன் சமீப காலமாக கடும் மன உளைச்சலில் உள்ளார். நேற்று கொச்சியில் உள்ள என்னுடைய பிளாட்டுக்கு வந்து என்னை தாக்கினார். வேறு ஒரு நடிகர் எனக்கு தந்த கூலிங் கிளாசை காலில் போட்டு மிதித்து நொறுக்கினார்.

டொவினோ தாமஸ் நடித்த நரிவேட்டை படத்தை நான் இன்ஸ்டாகிராமில் பாராட்டியிருந்தேன். இதுதான் உன்னி முகுந்தனின் ஆத்திரத்திற்கு காரணமாகும். ஆகவே என்னை தாக்கியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விபின்குமார் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து நடிகர் உன்னி முகுந்தன் மீது இன்ஃபோபார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.