Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வல்லான் விமர்சனம்

கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தொழிலதிபரின் கொலை வழக்கை விசாரிக்கும் போலீசார் திணறுவதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சியிடம் அந்த வழக்கை ஒரு உயரதிகாரி ஒப்படைக்கிறார். அந்த வழக்கின் பின்னணியில், தனிப்பட்ட தனது சில பிரச்னைகளுக்கான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விசாரணையை தொடங்கும் சுந்தர்.சி, அடுத்தடுத்த கொலைகளால் சூழ்ந்த மர்மங்களால் திணறுகிறார். கொலை செய்யப்பட்டவரிடம் இருக்கும் ஒன்றை அடைய அரசியல்வாதியும், சில காவல்துறை அதிகாரிகளும் சுந்தர்.சிக்கு எதிராக சதி வலை பின்னுகின்றனர்.

அதிலிருந்து சுந்தர்.சி தப்பித்தாரா? மர்மங்கள் விலகியதா என்பது மீதி கதை. விறுவிறுப்பான கிரைம் திரில்லருக்கு ஏற்ப இயல்பாக நடித்துள்ள சுந்தர்.சி, ஆக்‌ஷன் மற்றும் காதல் காட்சிகளில் சோடை போகவில்லை. அவரைக் காதலிப்பதோடு தன்யா ஹோப் வேலை முடிந்துவிடுகிறது. மர்மம் விலக ஹெபா பட்டேல் உதவியுள்ளார். கவர்ச்சியாகவும் ஆடியிருக்கிறார். தொழிலதிபராக கமல் காமராஜ் மற்றும் அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், டிஎஸ்கே, தலைவாசல் விஜய், ஜெயகுமார் போன்றோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஊட்டியின் அழகையும், ஆக்‌ஷன் காட்சிகளின் விறுவிறுப்பையும் ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் கேமரா ரசிக்கும்படி படமாக்கியுள்ளது. சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை, கதை நகர உதவியிருக்கிறது. எடிட்டர் தினேஷ் பொன்ராஜ் காட்சிகளை கச்சிதமாக தொகுத்துள்ளார். எழுதி இயக்கிய வி.ஆர்.மணி சேயோன், முழுநீள கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார். லாஜிக்குகள் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.