Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வர்ஷாவின் கனவு பலித்தது

கடந்த 2015ல் ‘சதுரன்’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர், வர்ஷா பொல்லம்மா. பிறகு சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பார்ப்பதற்கு நடிகை நஸ்ரியா நாசிம் சாயலில் இருந்ததால், ரசிகர்களை அவர் எளிதில் கவர்ந்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த அவர், கடந்த மூன்று வருடங்களாக தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில், கன்னடத்தில் பி.சி.சேகர் இயக்கும் ‘மஹான்’ என்ற படத்தில் அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், வர்ஷா பொல்லம்மாவின் சொந்த ஊரே கர்நாடகாதான். இத்தனை ஆண்டுகளாக கன்னடத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல், 10 வருடங்கள் கழித்த பிறகே தனது தாய்மொழியில் நடிக்க வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இத்தனை வருடங்களாக ஏன் எனது தாய்மொழியில் நடிக்க ஒரு படம் கூட என்னை தேடி வரவில்லை என்று எப்போதுமே ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

அந்த நேரத்தில் நான் மற்ற மொழிகளில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். எனினும், கன்னடத்தில் சில நிமிடங்கள் வந்து செல்லும் காட்சிகளில் நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்தேன். அப்படி காத்திருந்ததால், 10 வருடங்கள் கழித்து வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். காரில் பயணம் செய்யும்போது மற்றவர்களின் கன்னட பாடல்களை விரும்பி கேட்டு ரசிக்கும் நான், இனிமேல் நான் நடித்த கன்னட படத்தின் பாடல்களை காரில் கேட்டுக்கொண்டே பயணிக்க வேண்டும் என்று ரகசியமாக பிரார்த்தனை செய்தேன். அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது’ என்றார்.