Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நாகேஷை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்: கஜேஷ் நாகேஷுக்கு விக்ரமன் அட்வைஸ்

சென்னை: ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் சார்பில் சாய் காவியா, சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜூ ஜெய்சங்கர் தயாரித்துள்ள படம், ‘உருட்டு... உருட்டு’. பாஸ்கர் சதாசிவம் எழுதி இயக்கியுள்ளார். நாகேஷ் பேரனும், ஆனந்த் பாபு மகனுமான கஜேஷ் நாகேஷ் ஹீரோவாகவும், ரித்விகா ஸ்ரேயா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, சின்னாளபட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, ‘அடிதடி’ நடேசன், ‘அங்காடித்தெரு’ கருப்பையா, பத்மராஜூ ஜெய்சங்கர் நடித்துள்ளனர்.

யுவராஜ் பால்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு அருணகிரி இசை அமைத்துள்ளார். பெப்சி தாஸ், பாஸ்கர் பாடல்கள் எழுதியுள்ளனர். கார்த்திக் கிருஷ்ணன் பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் விக்ரமன், கஸ்தூரிராஜா, ஆர்.வி.உதயகுமார் கலந்துகொண்டனர். அப்போது ஆனந்த் பாபு பேசுகையில், ‘அனைவரது ஆசிர்வாதமும் என் மகனுக்கு கிடைத்திருப்பது, என் தந்தை நாகேஷ் செய்த புண்ணியம். இது அவருக்கான மரியாதை என்று சொல்வேன்’ என்றார்.

விக்ரமன் பேசும்போது, ‘நாகேஷ் சாரை ‘பூவே உனக்காக’ படத்திலும், ஆனந்த் பாபுவை ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ படத்திலும் இயக்கினேன். அவர்கள் நடித்த முக்கிய காட்சியை, படத்தின் நீளம் கருதி நீக்கிவிட்டேன். நாகேஷ் நடித்த ஒரு காட்சியை நான்கு முறை படமாக்கினேன். அன்று நள்ளிரவு என்னிடம் வந்த நாகேஷ், அந்த காட்சியை மறுநாள் மீண்டும் படமாக்கலாம்.

நான் நன்றாக நடிக்கவில்லை போலிருக்கிறது என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் எவ்வளவு பெரிய கலைஞன். ஒரு இயக்குனரை திருப்திப்படுத்த வேண்டும் என்று எவ்வளவு பாடுபடுகிறார் என்பதை நினைத்து மெய்சிலிர்த்தேன். அதுபோல்தான் ஆனந்த் பாபுவும். எனவே, இப்படத்தின் ஹீரோ கஜேஷ் தன் தந்தையையும், தாத்தாவையும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.