கோடை விடுமுறையில் தங்கள் ஊரில் உள்ள ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை, அக்கிணற்றின் உரிமையாளர் வந்து அடித்து துரத்துகிறார். இதனால், சிறுவர்களில் ஒருவரான கனிஷ்குமாருக்கு, தங்கள் நிலத்தில் சொந்தமாக ஏன் கிணறு வெட்டக் கூடாது? என்ற யோசனை வருகிறது. ஆனால் அதற்கு கனிஷ்குமாரின் பாட்டி ‘குடும்பத்திற்கு தண்ணியில் கண்டம் இருக்கிறது’ என கூறி தடையாக இருக்கிறார். இதற்கு நடுவே அவரது மாமா, பாட்டியின் நிலத்தை விற்க குறியாக நிற்கிறார்.
சிறுவர்கள் இதற்கு மத்தியில் என்ன செய்கிறார்கள், நினைத்தபடி கிணறு வெட்டினார்களா? இல்லையா என்பது மீதி கதை.
கனிஷ்குமார், அஸ்வின், ஸ்ரீஹரிஹரன், மனோஜ் கண்ணன் ஆகிய நான்கு சிறுவர்களுமே தங்களது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக பாட்டியிடம் சண்டை போடுவதும், குற்ற உணர்வில் அழுவதுமான இடங்களில் கனிஷ்குமார் தனியாக தெரிகிறார். கிளைக்கதையாக நடமாடும் பஞ்சர் கடையாக டிவிஎஸ் 50யில் வலம் வரும் விவேக் பிரசன்னா கவனிக்க வைக்கிறார்.
கிராமத்தின் அழகை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கவுதம் வெங்கடேஷ். புவனேஷ் செல்வநேசன் ஃபீல் குட் இசையை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் இசைக்கும் காட்சிக்கும் சம்பந்தமில்லாமல் வாத்தியங்கள் தாளம் போட்டுக்கொண்டிருக்கிறது. எடிட்டர் கவுதம் ராஜ் கே.எஸ். கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒரு கிணற்றைச் சுற்றி கதையமைத்து குழந்தைகள் உலகத்தை காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குனர் ஹரிகுமரன். சிறுவர்களை நன்றாக நடிக்க வைத்தவர், திரைக்கதையில் சற்று தடுமாறி இருக்கிறார். கொஞ்சம் மெதுவாக நகரும் சில காட்சிகள் படத்திற்கு மைனஸ். மொத்தத்தில் கிணறு உணர்ப்பூர்வமான ஒரு பயணம்.
