ஆர்.டி. எஸ் ஃபிலிம் ஃபேக்டரி , திருமால் லட்சுமணன், டி.ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் , யுவினா இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
சென்னை கோவளத்தில் ஒரு காவல் நிலையம். அங்கே தனது மகனை காணவில்லை என புகார் கொடுக்க வருகிறார் சக்திவேல் பாண்டியன் ( அருண் பாண்டியன்) . இதற்கிடையில் மந்திரி அரசியல் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்க சென்று விடுகிறார் அந்த காவல் நிலைய அதிகாரி ரகுராம் ( நட்டி ) . இதற்கிடையில் காவல் நிலையத்தில் இருக்கும் ஒரு மர்மமான லேப்டாப் மூலம் மொத்த காவல் நிலையத்தையும் தனக்கு கீழே கொண்டு வருகிறான் ஒரு முகம் தெரியாத மர்ம நபர். யாராக இருப்பினும் காவல் நிலையத்திற்குள் வர முடியும் ஆனால் வெளியே போனால் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பாம் வெடிக்கும். ஏன் எதற்கு அந்த காவல் நிலையம் மட்டும் பணயம் ஆக்கப்படுகிறது முடிவு என்ன என்பது மீதி கதை.
அருண் பாண்டியன் மற்றும் நட்டி கை தேர்ந்த நடிகர்கள் இருவரும் ஒன்றிணைந்து கதையை மிக அற்புதமாக கையாண்டு இருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக இருந்த யுவினா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கும் நல்வரவு நல்ல கதாபாத்திரம்.
பொதுமக்களுக்கு பிரச்சனை என்றால் காவல் நிலையத்தை நாடுவார்கள் அந்த காவல் நிலையத்திலேயே ஒரு பிரச்சனை என வித்தியாசமாக யோசித்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஆனால் அப்படி ஒரு காவல் நிலையத்தையே கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு கூட காவல் நிலையத்தை சுற்றிலும் கூட காவல் போர்ஸ் வராமல் இருப்பது சற்று சினிமாத்தனம். இந்நேரம் அது நாட்டையே உழுக்கும் ஒரு மிகப்பெரிய செய்தியாக மாறி இருக்கும். அந்தப் பரபரப்பை கொடுக்கத் தடுமாறுகிறது திரைக்கதை. எனினும் சமூகத்தில் தினம்தோறும் செய்திகளில் நாம் படிக்கும் ஒரு பிரச்சனை தான் இதன் அடிநாதம்.. ஏதாவது ஒரு வகையில் இந்த சமூக பிரச்சனையை பேசித்தான் ஆக வேண்டும். என்கிற பட்சத்தில் இந்த கதை கவனம் பெறுகிறது.
பத்மேஷ் மார்த்தாண்டன் ஒளிப்பதிவு காவல் நிலையத்திற்கு உள்ளையே சுற்று சுற்றி எடுத்து கதையை சுவாரசியமாக்கி இருக்கிறது. குணா பாலசுப்பிரமணியன் இசையில் திரைக்கதையின் அழுத்தமும் நன்றாக நமக்குள் கடத்தப்படுகிறது. எடுத்துக்கொண்ட கதையிலிருந்து விலகாமல் கதை நகர்கிறது. இன்னும் ஆழமாக அழுத்தமாக உணர்வுபூர்வமாக இந்த கதையை கொடுத்திருந்தால் நிச்சயம் " மகாராஜா" போல் மகத்தான வெற்றியையும் கொண்டாட்டத்தையும் சந்தித்திருக்கும். எனினும் இப்போதும் கவனிக்கப்பட வேண்டிய சமூக படமாக மாறி இருக்கிறது.