பெங்களூரு: சட்ட விதிமுறைகளை மீறி அனுப்பப்பட்டதாகக் கூறி, நடிகர் யஷ்ஷுக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீஸ்களை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் கன்னட திரையுலகைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பிரபல நடிகர் யஷ்ஷின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பொதுவாக நேரடியாகச் சோதனைக்கு ஆளானவருக்கு ஒரு சட்டப்பிரிவின் கீழும், அந்தச் சோதனையில் சிக்கும் மற்ற நபர்களுக்கு வேறொரு பிரிவின் கீழும் நோட்டீஸ் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், யஷ்ஷின் வீடு நேரடியாகச் சோதனை செய்யப்பட்டிருந்தும், அவருக்குச் சோதனைக்கு ஆளாகாத நபர் என்ற பிரிவின் கீழ் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி, 2013 முதல் 2019 வரையிலான நிதியாண்டுகளுக்கு வரி மதிப்பீடு செய்தது. இதை எதிர்த்து நடிகர் யஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ணகுமார், மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு நேற்று தீர்ப்பளித்தார்.
அப்போது, ‘நேரடியாகச் சோதனைக்கு உள்ளானவரைச் சோதனைக்கு ஆளாகாதவர் என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தியது அடிப்படைத் தவறாகும்’ என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், ‘சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் நடிகர் யஷ்ஷுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்கள் மற்றும் வரி மதிப்பீட்டு உத்தரவுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை, தன்னிச்சையானவை மற்றும் அதிகார வரம்பற்றவை’ என்று குறிப்பிட்டு அவற்றை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
