Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காப்புரிமை சிக்கல் காரணமாக ராமாயணம் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்

மும்பை: ரன்பீர் கபூர், சாய் பல்லவி, சன்னி தியோல், யஷ் நடிப்பில் உருவாகும் படம், ‘ராமாயணம்’. நிதேஷ் திவாரி இயக்குகிறார். ரகுல் பிரீத் சிங், லாரா தத்தா, பாபி தியோல் உள்பட பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை முதலில் அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ், நமீத் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ், அல்லு அரவிந்த் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக மூவரும் பிரிந்தனர். இதனால் நமீத் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், கன்னட நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்சுடன் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படம் 3 பாகங்களாக உருவாக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது 2 பாகங்கள் மட்டுமே உருவாகும் என்று படக்குழு கூறியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. அப்போது படமாக்கப்பட்ட சில போட்டோக்கள் இணையதளங்களில் கசிந்தது. ஆனால், இப்படத்துக்கான காப்புரிமை தொடர்பாக நமீத் மல்ஹோத்ராவுக்கு தயாரிப்பாளர் மது மண்டேனா நோட்டீஸ் அனுப்பினார். படத்தின் ஸ்கிரிப்ட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், வேறு யாராவது அதைப் பயன்படுத்தினால், அது காப்புரிமை மீறல் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரித்து இருந்தார். இந்நிலையில், திடீரென்று ‘ராமாயணம்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை பிரச்னை பேசி தீர்க்கப்பட்ட பிறகே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.