Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தர்மேந்திரா பிறந்தநாளில் ஹேமமாலினி உருக்கம்

நேற்று தர்மேந்திராவின் 90வது பிறந்தநாளையொட்டி, இந்தியா முழுவதும் இருந்து மும்பைக்கு வந்த ரசிகர்கள் பலர், அவரது மும்பை வீட்டுக்கு முன்பு திரண்டனர். கடந்த நவம்பர் 24ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தர்மேந்திரா காலமானார். இந்நிலையில், தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன்களான பாபி தியோலும், சன்னி தியோலும் தர்மேந்திராவின் பிறந்தநாள் விழாவுக்கு வந்த ரசிகர்களை சந்தித்தனர். ஆனால், தர்மேந்திராவின் 2வது மனைவியும், நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமமாலினி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், ‘தரம் ஜி, என் அன்பு இதயமே, பிறந்தநாள் வாழ்த்துகள். என்னைவிட்டு நீங்கள் பிரிந்து சென்று இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது.

இதயம் நொறுங்கிய நிலையில், மெதுவாக என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறேன். ஆனால், நீங்கள் எப்போதும் என்னோடு இருப்பீர்கள் என்பது தெரியும். நாம் ஒன்றாக வாழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகள் ஒருபோதும் அழியாதவை. அந்த தருணங்களை மீண்டும் நினைத்து பார்ப்பது மட்டுமே எனக்கு மிகப்பெரிய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும். நமது அன்பை மீண்டும், மீண்டும் உறுதி செய்யும் நமது இரு அழகிய பெண்களுக்காகவும், என் இதயத்தில் என்றென்றும் தங்கியிருக்கும் அனைத்து நினைவுகளுக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.