Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

25 வருடத்துக்கு முன் கண்ட எனது கனவை ஐசரி கணேஷ் நிறைவேற்றியுள்ளார்: கமல் புகழாரம்

சென்னை: வேல்ஸ் கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களின் சார்பில் சென்னை செம்பரம்பாக்கத்தில் வேல்ஸ் வர்த்தக மையம் மற்றும் மாநாட்டு மையம், திரைப்பட நகரம், திரையரங்குகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை திறந்து வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, ‘‘தமிழ்நாடு இரட்டை இலக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என ஐசரி கணேஷ் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக மாநில அரசு பங்களிப்பு போல், தனியாரின் பங்களிப்பும் உள்ளது. அந்த தனியார் நிறுவனங்களில் வேல்ஸ் குழுமமும் ஒன்று.

உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வேல்ஸ் நிறுவனங்களுக்கு நன்றி’’ என்றார். விழாவில் கமல்ஹாசன் பேசியது: வேல்ஸ் கல்வி நிறுவனங்களில் 50 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். கல்வி, சினிமா, அரசியல் இந்த மூன்று துறைகளிலும் ஐசரி கணேஷ் பரிச்சயமானவர். அவரை அவரது தந்தை எளிமையாக வாழ கற்றுத் தந்துள்ளார். அவரது சினிமா நிறுவனத்தில் நான் நடித்தது கிடையாது. ஆனாலும் எங்களுக்குள் சகோதர பாசம் இருக்கிறது. அதற்கு காரணம், எம்ஜிஆர். அவர்தான் எங்களை சகோதரர்களாக மாற்றினார்.

இங்கு என்னைப் பற்றி பேசும்போது பல பட்டப் பெயர்களை சொல்லி அழைத்தனர். ஆனால் நான் சினிமாவுக்கு குழந்தை என்பதுதான் எனது முகவரி. என் கல்வி, எனது மொழி, எனது வாழ்க்கை எல்லாமே கலையால் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முன் வெளிநாட்டிலுள்ள ஸ்டுடியோக்களை பார்த்துவிட்டு, ஏவிஎம்மிலும் இதுபோல் மேலும் 10 தளம் அமைத்து மெகா ஸ்டுடியோ ஆக்க வேண்டும் என கனவு கண்டேன்.

அதை சரவணன் சாரிடம் சொன்னபோது, நான் 10 தளம் கட்டுகிறேன். நீங்கள் அதை பார்த்துக் கொள்கிறீர்களா என கேட்டார். என்னால் அது முடியாது என்றேன். இன்று, அந்த கனவை வேல்ஸ் திரைப்பட நகரம் மூலம் ஐசரி கணேஷ் நிறைவேற்றியுள்ளார். ஆசியாவிலேயே பெரிய படப்பிடிப்பு தளமாக இது உருவாகியுள்ளது. நான் பேசிக்கொண்டு இருந்ததை, இங்கு ஐசரி கணேஷ் செயல்படுத்திக் காட்டிவிட்டார்.

இதுபோல் சினிமாவுக்கான பயிலரங்கமும் இங்கு அமைக்க வேண்டும் என கோருகிறேன். பான் இந்தியா சினிமாவுக்கான ‘ஹப்’ சென்னைதான். மும்பையில் கூட இந்தி படங்கள் மட்டுமே எடுத்து வந்தார்கள். ஆனால் சென்னையில்தான், அனைத்து தென்னிந்திய மொழி படங்களையும் உருவாக்கி வந்தார்கள். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். வேல்ஸ் குழுமம் தலைவர் ஐசரி கணேஷ், எம்ஜிஆர் பல்கலை.வேந்தர் ஏ.சி.சண்முகம், குஷ்மிதா கணேஷ், திரையுலகை சேர்ந்தவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.